மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக, ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல்

🕔 July 8, 2018
ட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீா்வு காண்பதற்கான உயா்மட்டக் கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை, அட்டாளைச்சேனை பொது மக்கள் நலன்புரி சேவைகள் தொடர்பான அபிவிருத்தித் திட்டங்களுக்கான காணி ஒதுக்கீடு மற்றும் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மையவாடி காணிகளின் உரிமை தொடர்பான விடயங்கள் என்பன இக்கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டன.

மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் பல தசாப்தங்களாக முஸ்லிம்களுக்கு உரித்துடைய காணிகளிலிருந்து, அதனை ஆட்சி செய்பவர்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அதிகாரிகளினால் மக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கள் செய்யப்பட்டுவரும் நிலைமை தொடர்பாகவும் தெரியவந்தது.

அதேவேளை, இவ்வாறு காணிகளை அனுபவித்து வரும் வேறு சில சமூகத்தவர்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது, இன பாரபட்ச முறை நிகழ்வதாகவும் கருத்துகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

மேலும் இப்பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை, நாவற்கேணி முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடமைப்புக்கான காணி 1897ஆம் ஆண்டு முதல் அனுபவித்துவருவதுடன் 1937ஆம் ஆண்டு மட்டக்களப்பு உயர்நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஏல விற்பனையின்போது, விலைக்கு வாங்கப்பட்ட 21 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகும். இதன் ஒரு பகுதியை அரச காணி எனக் குறிப்பிட்டு முஸ்லிம் தனிக்குடியிருப்பு பகுதியில் தமிழ் சமூகத்துக்கான மயானம் அமைக்கும் திட்டமொன்றை செயற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகள் இன முறுகலுக்கும் சமூக பாரபட்சத்துக்கும் வழியமைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படது. நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக காணி அமைச்சரின் பணிப்புரையினால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது.

இன்னும் காத்தான்குடி பிரதேசத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக காத்தான்குடி பள்ளிவாசலின் கட்டுப்பாட்டில் செயற்பட்டுவரும் மையவாடி காணிகளை குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்கு வழங்குமாறும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எச். கருணா, பிரத்தியேக செயலாளர் எச். அபிருப்தரணி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் இதர அமைப்புகளின் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அஹமட்லெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments