அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை

🕔 July 3, 2018

– மப்றூக் –

சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த ஐ.எம். ஹனீபா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபர் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக அரசாங்க அதிபராகத் தெரிவாகி, மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றிய எம்.எம். மக்பூல், 1988ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஐ.எம். ஹனீபா தற்போது அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையினுள் உள்வாங்கப்பட்ட இவர், அதே ஆண்டு நிந்தவூர் உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பிரதேச செயலாளராகப் பதவி உயர்வு பெற்று அதே செயலகத்தில் பணியாற்றினார்.

அதனையடுத்து காத்தான்குடி, இறக்காமம், அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களிலும் பிரதேச செயலாளராக ஐ.எம். ஹனீபா கடமை புரிந்தார்.

இறுதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளராகப் பணியாற்றிய நிலையிலேயே, இவர் தற்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஓர் ஆசிரியராக தனது தொழிலை ஐ.எம். ஹனீபா ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் நிருவாகத்தை நடத்துவதில் ஹனீபா புகழ் பெற்றவர். இவர் பிரதேச செயலாளராக பணியாற்றிய காலத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல், மிகவும் நேர்மையுடன் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு பணியாற்றியிருந்தார்.

30 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஓர் அரசாங்க அதிபராக ஐ.எம். ஹனீபா நியமிக்கப்பட்டுள்ளமையானது, முஸ்லிம்களுக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எம். ஹனீபா – அம்பாறை மாவட்டம், சம்மாந்துறையை சொந்த இடமாகக் கொண்டவராவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்