பிரதமர் ரணிலைத் தோற்கடிக்க, ஜனாதிபதி மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த பகீர் தகவல்

🕔 June 29, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே ஜனாதிபதி தனது நிலைப்பாட்டைக் கைவிட்டு விட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

டெய்லிமிரர் பத்திரிகைக்கு, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள செவ்வியிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, அடுத்த வேட்பாளராக இருப்பாரென்று, பலரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றமை பற்றி மஹிந்தவிடம் கேட்கப்பட்ட போது; “ஜனாதிபதி வேட்பாளருக்குப் பொருத்தமானவராக அவர் இருப்பார் என்றே அனைவரும் கூறுகின்றனர். ஆனால், அவரைத் தெரிவு செய்துவிட்டோம் என்று யாரும் கூறவில்லை. அத்தோடு, வேறு சில கோணங்களிலும் இது பற்றிப் பேசப்படுகின்றது” என்றார்.

“கடந்த தேர்தலில், நீங்கள் தோல்வியைத் தழுவியமைக்கு, நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களின் முக்கிய பங்களிப்பே காரணம் என்று கூறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மையினரின் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் குறித்து தங்களுடைய கருத்து யாது?” என்று அவரிடம் வினவப்பட்ட போது;

“அனைத்துச் சமூகங்களிலிருந்தும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வது முக்கியமானது. சிறுபான்மைச் சமூகம், ஒரு கட்சிக்கு மாத்திரம்தான் வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுத்தால், அது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அதுவே தேர்தலின் இறுதி முடிவில் ஒரு காரணியாக அமையாது. ஆனால், ஜனாதிபதியாக ஒருவர் வரவேண்டும் என்றால், அனைத்து சமூகத்தினதும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானது” எனப் பதிலளித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்; “கடந்த முறை, எங்களுக்கு எதிராக, போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. உண்மையில், எங்களுடன் இருந்தவர்களாலேயே, அவை முன்னெடுக்கப்பட்டிருந்தன. எங்களைக் காட்டிக்கொடுத்து விட்டு, அவர்கள் கைவிட்டார்கள். ஆனால், தற்போது, சிறுபான்மைச் சமூகத்தினர், அதை உணர்வதற்கு ஆரம்பித்துள்ளனர். எம்முடைய அரசாங்கம் உதவி செய்ததைப்போன்று, எந்தவொரு அரசாங்கமும் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு உதவவில்லை. முஸ்லிம் சமூகத்தினர், தத்தமது கிராமங்களில் சந்தோஷமாக இருக்கினரென்றால், அதற்கு, எங்களுடைய அரசாங்கமே காரணமாகும்” எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்