முறையற்ற இடமாற்றம் வழங்கிய முன்னாள் முதலமைச்சருக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

🕔 June 28, 2018

னக்கு முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக, அதிபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், குறித்த அதிபருக்கு ரூபா 02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு இன்று வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டாரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இந்த நஷ்டஈட்டை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவருக்கு மேலும் 50 ஆயிரம் ரூபாவை  நஷ்ட ஈடாக அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈவா வனசுந்தர உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று வழங்கினர்.

இன்றிலிருந்து இரு மாதங்களுக்குள் குறித்த இடமாற்றத்தை இரத்துச் செய்து, குறித்த அதிபரை முன்னர் பணி புரிந்த இடத்தில் பணிக்கு அமர்த்துமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனுதாரர் கருணாரத்ன பண்டார, கடந்த 2016 ஆம் ஆண்டு, அநுராதபுரம் நிவத்தக சைத்திய மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றியிருந்தார். இதன்போது 2016 செப்டெம்பர் 09 ஆம் திகதி தமது பாடசாலையில் இடம்பெற்ற அடிக்கல் நடும் விழாவை உரிய முறையில் ஒழுங்கு செய்யவில்லை என தெரிவித்து, தன்னை முதலமைச்சர் இடம்மாற்றம் செய்ததாக அவருடைய மனுவில் தெரிவித்திருந்தார்.

அத்துடன் குறித்த முடிவுக்கு எதிராக தான் அவரிடம் மேன்முறையீடு செய்தபோதும், அது நிராகரிக்கப்பட்டதாகவும் அதிபர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, இதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறும், தனது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறும், அதிபர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனடிப்படையில் இடம்பெற்ற நீண்ட விசாரணைகளின் பின்னர், குறித்த அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தின் மூலம், முன்னாள் வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன பண்டார, மனுதாரரின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்