அக்கரைப்பற்று 40ஆம் கட்டை காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்தவை; வரலாற்றினை திரிபு படுத்தக் கூடாது: நஸார் ஹாஜி

🕔 June 22, 2018

– அஹமட் –

க்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியிலுள்ள காணிகளில் அதிகமானவை, ஒரு காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமாகவிருந்த உறுதி நிலங்களாகும். அவற்றினை முஸ்லிம்கள் கொள்வனவு செய்யக் கூடாது என்று கூறுகின்ற தமிழர் தரப்பைச் சேர்ந்தவர்கள் – வரலாற்றினை அறிந்து கொண்டு பேச வேண்டும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், குறித்த காணிகள் ஒரு போதும் அரச நிலங்களாகவோ, களப்பாகவோ இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம் ஒருவர் கொள்வனவு செய்த காணிக்கு வேலியிடுவதற்காக அண்மையில் சென்றிருந்தபோது, காணி உரிமையாளர் உட்பட 06 முஸ்லிம்கள் மீது, சில தமிர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

மேலும், 40ஆம் கட்டை பகுதிலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளை முஸ்லிம்கள் கொள்வனவு செய்யக் கூடாது எனத் தெரிவித்து, தமிழர் தரப்பிலிருந்து துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கும் வகையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜியார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

முஸ்லிம்களுக்கு சொந்தமானவை

40ம் கட்டை என்று அறியப்படும் அக்கரைப்பற்று – 09 ம் பிரிவுிலுள்ள காணிகளில் அதிகமானவை முஸ்லிம்களுக்கு சொந்தமான உறுதி நிலங்களாக இருந்தவையாகும்.

‘குஞ்சம் போடி தவக்குமார்’ என்பவரிடம் இருந்து 1954ம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அப்துல் மஜீட் (சுவீட் மஜீட்) மற்றும் அக்கரைப்பற்றை சேர்ந்த மர்ஹும் முகம்மது மீராசாயிப் (அலவாங்கு போடியார்) ஆகியோர், 40ஆம் கட்டை பகுதில் தலா 05 ஏக்கர் 01 ரூட் காணிகளை, பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்.

இதனை நிரூபிக்கும் வகையிலான உறுதிகள் அவர்களின் பரம்பரையினரிடம் தற்போதும் உள்ளன.

மேலும், அக்ரைப்பற்றைச் சேர்ந்த மர்ஹூம் உஸைன் (கராட்டி பாயிஸ் அதிபரின் தாய் மாமன்) என்பவருக்கு, 40ஆம் கட்டையில் 08ஏக்கர் காணி இருந்தது. அதை சுமார் 12 வருடங்களுக்கு முன்னர், தமிழர் ஒருவருக்கு  80 ஆயிரம் ரூபாவுக்கு அவர் விற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கு மேலதிகமாக அக்கரைப்பற்று – 02ஐ சேர்ந்த கலீல் என்பவருக்கும் இன்னும் பல முஸ்லிகளுக்கும் மற்றும் சில தமிழ் சகோதரர்களுக்கும் இந்த பிரதேசத்தில் காணிகள் இருக்கின்றன.

இவ் ஆதனங்கள் அரச காணியாகவோ, களப்பாகவே ஒருபோதும் இருக்கவில்லை.

இன்னும் ஒரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

மயானக் காணி – முஸ்லிம்கள் கொடுத்தது

தற்போது 40ஆம் கட்டை பகுதியில் தமிழர்களுக்குரிய ‘மயானம்’ அமைந்துள்ள காணியின் வரலாறு பற்றியும் கூற வேண்டும். இந்தக் காணியானது தமிழர்களுக்கு கருணை அடிப்படையில் முஸ்லிம்கள் இலவசமாக வழங்கியதாகும்.

அந்தக் காலப்பகுதியில் இங்குள்ள தமிழர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக, சுமார் 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ‘சிப்பித் திடல்’ எனும் இடத்துக்கு கொண்டு செல்வார்கள். அந்த நிலையினைப் பார்த்து பரிதாபப்பட்டுத்தான், 40ஆம் கட்டையில் மயானம் அமைப்பதற்காக, தமிழர்களுக்கு தமது நிலங்களை முஸ்லிம்கள் இலவசமாக வழங்கியிருந்தனர்.

இந்த விடயத்தில் சம்மந்தப்பட்டவர்களில் சலாஹுதீன் அதிபரும் (ஜின்னா முதலாளி மருமகன்) ஒருவராவார். அவர் இன்னும் உயிர் வாழ்கிறார். இது தொடர்பாக மேலும் அறிய வேண்டுமென்றால்,  அவரிடம் தகவல்களைப் பெறலாம்.

வேதனை

இவ்வாறு பல வரலாற்று ஆதாரங்களும், சாட்சிகளும் இருக்கும் நிலையில், 40ஆம் கட்டை பகுதியிலுள்ள காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என்றும், களப்பு என்றும் கூறுகின்றமை, உண்மைக்குப் புறம்பானதும் குரோதத்தனம் நிறைந்ததுமாகும்.

மேலும் வரலாறு அறியாத புதிய வியாபாரிகள் அரசியலுக்குள் புகுந்து கொண்டு, முஸ்லிம் – தமிழ் உறவை பகைமையாக சூடேற்றி, அதில் தமது அரசியல் இருப்பை தக்கவைக்க நினைக்கின்றமையும் வேதனையானதாகும்.

ஆகவே, வரலாற்றினைத் திரிபு படுத்தாமல், முஸ்லிம் – தமிழர்களுக்கிடையில் நல்லுறவினை ஏற்படுத்துவதற்கும், அதனூடாக இரண்டு தரப்பினரும் மகிழ்சியோடு வாழ்வதற்கும் உரிய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதுவே, நமது விருப்பமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்