விஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்

🕔 June 20, 2018

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் – தான் உபபேந்தராக இருந்தபோது, தனது வீட்டுக்கு பல்கலைக்கழகத்தின் நிதியிலிருந்து நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் செலுத்தப்பட்டமை உண்மையென்றும், ஆனால் தனக்கு வழங்கப்பட்ட சலுகையின் அடிப்படையிலேயே அதனைச் செய்ததாகவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட  இஸ்மாயில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பொதுக் கணக்குகள் குழுவின் அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு, கன்னியுரை ஆற்றி போதே இதனைக் கூறினார்.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியமை காரணமாக, அப் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவ மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

கடந்த நாடாளுமன்ற அமர்வு வாரத்தில், இஸ்மாயில் பதவியேற்றபோது, உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, இஸ்மாயில் மீதும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்ட விடயங்களை அவர் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உபவேந்தராக நான் கடமையாற்றியபோது எனது வீட்டுக்கு தண்ணீர் கட்டணமும் மின்சாரக் கட்டணமும் செலுத்தப்பட்டதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ கூறியிருந்தார். உபவேந்தர் பதவிக்காக பல்வேறு சலுகைகள் சட்டரீதியாக வழங்கப்பட்டது. மூதவை மற்றும் பல்கலைக்கழகத்தின் உரிய அனுமதிகள் பெறப்பட்டே சலுகை வழங்கப்பட்டது. அதற்கான ஆவணங்கள் இருக்கின்றன.

தேவை ஏற்படின் இவற்றுக்குரி ஆவணங்களை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கத் தயாராகவிருக்கின்றேன்.

அதேநேரம் தென்கிழக்குப் பல்லைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள், ஆண்கள் பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் உண்மையை நிரூபித்த பின்னர் என்மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” என்றார்.

தொடர்பான செய்தி: ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்