தெ.கி. பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக, உமா குமாரசாமி நியமனம்: வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு

🕔 June 20, 2018

– மப்றூக் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக, உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அரசாங்க வர்த்தமானியின் ஊடாக, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20 (04)(ஆ) பிரிவினால் தனக்கு வழங்கப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில், இந்த நியமனத்தை, தான் மேற்கொள்வதாகவும் அமைச்சர் அந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகம் பாரதூரமான வகையில் ஒழுங்கு குலைந்துள்ளது என்றும், இந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் இயல்பு நிலையினை மீட்டெடுப்பதற்கு தவறியுள்ளனர் என்றும் கூறப்படுவதில் திருப்திப்படுவதன் காரணமாகவே,  அந்தப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமியை நியமிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்;

‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு சொல்லப்பட்ட சட்டத்தின் கீழ், அல்லது அதன்கீழ் ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளை, கட்டளைச் சட்டம், நியதிச் சட்டம், துணை விதி, ஒழுங்கு விதி, அல்லது விதியின் கீழ் அளிக்கப்பட்டுள்ள, அல்லது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள, அல்லது அவருக்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள ஏதேனும் தத்துவத்தை, கடமையை அல்லது பணியை – சொல்லப்பட்டுள்ள உபவேந்தருக்குப் பதிலாக பிரயோகிக்கின்ற, புரிகின்ற மற்றும் நிறைவேற்றுகின்ற நோக்கத்துக்காக 18 ஜுன் 2018ஆம் திகதியிலிருந்து தகுதி வாய்ந்த அதிகாரியாக இருப்பதற்கு பேராசிரியர் உமா குமாரசாமியை இக் கட்டளை மூலம் நியமிக்கிறேன்’ என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே, அவரின் சேவை முடிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்