ஒலுவில் நபர் மீது, பெருநாள் தினத்தில் கொடூர தாக்குதல்; சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அசட்டை

🕔 June 19, 2018

 – அஹமட் –

லுவில் பிரதான வீதியில் வைத்து, கடந்த சனிக்கிழமை பெருநாள் தினத்தன்று அப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். ஜலீல் (வயது 35) என்பவர் மீது, இளைஞர்கள் குழுவொன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்ட சிசிரிவி வீடியோ பதிவொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று தாக்குதலுக்குள்ளான நபர், பாலமுனையிலிருந்து ஒலுவில் நோக்கி, பிரதான வீதி வழியாக தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது பாலமுனை துறைமுக வீதியின் முன்னால், பிரதான வீதியை மறித்தவாறு சில இளைஞர்கள் நின்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளானவர் வீதியை மறித்து நின்ற இளைஞர்களின் தவறை சுட்டிக்காட்டி பேசியதாகவும், அதனையடுத்து அவர்களுக்கிடையில் வாய்த் தர்க்கமும் கைகலப்பும் ஏற்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இதனைத் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான நபர், தனது வாகனத்தைக் கைவிட்டு, ஒலுவில் பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் வரை ஓடி வந்துள்ளார். இருந்த போதும், குறித்த இளைஞர்கள் அவரை பின்னால் விரட்டி வந்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இவ்வாறு தாக்குதலை நடத்தும் போது பதிவான சிசிரிவி வீடியோ காட்டிகளே, ‘புதிது’ செய்தித் தளத்துக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

தாக்குதலுக்குள்ளானவர் ஒலுவில் 02ஆம் பிரிவைச் சேர்ந்தவராவர். எம்.ஐ.எம். ஜலீல் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் – நியாஸ் என்றும் அழைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

மேற்படி தாக்குதல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நபர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அன்றைய தினமே அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில், சில பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளுக்கு பாதிக்கப்பட்ட அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, சம்பவ தினத்தன்றே – பாதிக்கப்பட்டவர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்திருந்த போதிலும், தாக்குதலை மேற்கொண்டவர்கள் இது வரையில் கைது செய்யப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் கூறினர்.

பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 12 இளைஞர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அவர்களின் பெயர் மற்றும் விபரங்களுடன், சம்பவம் நடந்தபோது பதிவான சிசிரிவி வீடியோ காட்சிகளை அக்கரைப்பற்று பொலிஸாருக்கு வழங்கியும் கூட, சந்தேக நபர்களைக் கைது செய்வதில் பொலிஸார் அக்கறை காட்டுவதாக இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிது செய்தித்தளத்துடன் பேசும்போது விசனம் தெரிவித்தனர்.

சிசிரிவி காட்சி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்