மினி சூறாவளி: சாய்ந்தமருதில் வீடுகள் சேதம்; பிரதேச செயலாளர் ஹனீபா அவசர நடவடிக்கை முன்னெடுப்பு

🕔 June 18, 2018
– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன், எம்.வை. அமீர் –

சாய்ந்தமருது பொலிவேரியன் சிட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 51 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றுசாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.
இதன் காரணமாக, குறித்த வீடுகளில் வசித்த  214 பேர் நிர்க்கதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்திலும் உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

அத்துடன் எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டிடமொன்றின் கூரையும் சேதமடைந்துள்ளது. இதனால் நோன்பு கால விடுமுறையின் பின்னர் இன்று முஸ்லிம் பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும் இப்பாடசாலை இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கல்முனை மாநகர சபையைச் சேர்ந்த குழுவினர், இன்று பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களுக்கு வந்து ஆராய்ந்தனர். இதன்போது சேதமடைந்த வீடுகளை உடனடியாக துப்பரவு செய்தல் மற்றும் புனரமைப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ். ஜெயநதி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். அஸீம் எம்.ஏ.றபீக், எம்.ஐ. அஸீஸ் ஆகியோரும் இங்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட மக்களின் சேம நலன்கள் தொடர்பில் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்