முஸ்லிம்களோடு முட்டி, வர்த்தக முத்திரையை பறிகொடுத்த வீரகேசரி: ஆரம்பத்திலேயே நடந்த அவமானம்

🕔 June 18, 2018

– சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌஷாட் மொஹிடீன் –

வீரகேசரி பத்திரிகையின் மீது முஸ்லிம் சமூகத்தின் சீற்றம் திரும்பியுள்ளது. திருகோணமலை ஹபாயா விடயத்தை வைத்து இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தினக்குரல் அண்மையில் ஒரு செய்தியை வௌியிட்டு இருந்தது. இப்போது வீரகேசரியும் அதே விதத்தில் ஒரு செய்தித் தலைப்பை தந்துள்ளது.

பொது பல சேனா கூறியதாகத்தான் வீரகேசரி செய்தி வௌியிட்டுள்ளது. இருந்தாலும் இவ்வாறான தலைப்புக்களை இன்றைய காலகட்டத்தில் ஒரு கீழ்த்தரமான இணைத்தளத்தில் இருந்துதான் எதிர்ப்பார்க்கலாமே தவிர தினக்குரல் அல்லது வீரகேசரி போன்ற – மக்களால் பரவலாக வாசிக்கப்படுவதாகக் கூறப்படும் தேசிய மட்ட தமிழ் பத்திரிகைகளில், இவ்வாறான தலைப்புக்கள் வௌியிடப்படுவது மிகவும் கவலைக்குரியது.

இவை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களின் முதிர்ச்சியற்ற நிலை, அனுபவமின்மை, அறிவீனம் என்பனவற்றின் வௌிப்பாடாகவே அமைகின்றது.

வீரகேசரி பத்திரிகை இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் செய்திகளை அல்லது படங்களை வௌியிட்டுள்ளமை இது முதற்தடவையல்ல. இங்கே அந்தப் பத்திரிகையின் ஆரம்பகால சம்பவம் ஒன்றை நினைவூட்டுவது சாலச் சிறந்தது.

வீரகேசரி தொடங்கப்பட்ட 1930களின் ஆரம்பத்தில் ஒரு படத்தை அந்தப் பத்திரிகை வௌியிட்டு, அது இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது புகைப்படம் என விளக்கம் அளித்திருந்தது. இதனால் அன்றைய கால முஸ்லிம்கள் கொதித்து எழுந்து வீரகேசரி நிறுவனத்துக்கு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனால் அன்றைய இலங்கை நிர்வாகம் இந்த விடயத்தில் தலையிட்டு வீரகேசரியின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையை (Trade Mark) பாவிக்கக் கூடாது என உத்தரவிட்டது. அன்றோடு வீரகேசரி அதன் வர்த்தக முத்திரையை இழந்து விட்டதாக தகவல்கள் உள்ளன.

அன்றைய கால கட்டத்தில் வர்த்தக முத்திரையை இழப்பதென்பது பெரும் அவமானத்துக்கு உரிய ஒன்றாகக் கருதப்பட்டது. இது மூடி மறைக்கப்பட்ட ஒரு வரலாறு.

வீரகேசரியின் ஆரம்பமே முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காததாகவே இருந்திருக்கிறது என்பதை இன்று கொதித்துக் கொண்டிருப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

கீழே தரப்பட்டிருப்பது 1930ல் வௌியான வீரகேசரியின் முதல் பிரதியின் முதல் பக்கம். இங்கு வீரகேசரி என்ற சொல்லை தாங்கி இருப்பது இரண்டு சிங்கங்கள். கேசரி என்ற சொல்லுக்கு சிங்கம் என்றும் அர்த்தம். இதுதான் அவர்களின் வர்த்தக முத்திரை.

முஸ்லிம்களின் தீவிர எதிர்ப்பால் ஆரம்ப காலத்திலேயே இந்த வத்தக இலச்சினையை அந்தப் பத்திரிகை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்