அட்டாளைச்சேனையின் அடையாளம்: எண்பத்தைந்து வயது ‘இளைஞர்’ இப்றாலைப்பை

🕔 June 17, 2018

– பாவேந்தல் பாலமுனை பாறூக் –

காரியலய உடை நேர்த்தி, நேர ஒழுங்கு என்று ஓய்வுக்குப் பின்னும் வாழ்வை ஒழுங்கமைத்துக் கொண்டு வாழ்பவர் ஏ.எல். இப்றாலெவ்வை.

எண்பத்தைந்து வயது இளைஞர் இவர். இளமைக்கால சீரான நடை முறை, பயிற்சி, பழக்கம் என்பவை வழங்கிய மன வலிமையினால் தொடர்ந்தும் சமூகப்பணிகளில் துடிப்போடு இயங்கி வருகிறார்.

ஆத்ம பலத்தோடு சுறுசுறுப்பாக செயலாற்றுகின்ற இவர், முன்மாதிரியாகக் கொள்ளத் தக்கவர்.

அட்டாளைச்சேனை அஹமட்லெப்பை மரைக்கார் – செய்னம்பு நாச்சி தம்பதியின் புதல்வராகப் பிறந்த இந்தக் கல்மானிடமிருந்து,  நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றன.

சுவாமி விபுலானந்த அடிகளார், சுவாமி நடராஜானந்த ஜீ ஆகியோரோடு இவர் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். தன்னடக்கம், உயரிய பண்புகள், சுயகட்டுப்பாடு, முயற்சி, ஆகியவற்றினால் கல்வி மற்றும் ஏனைய துறைகளில் தன்னை வளர்த்துக் கொண்டவர்.

இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் 1980ல் அம்பாறை மாவட்டத்தில் மூவினங்களுக்குள்ளும் ஆங்கில மொழிமூலம் தோற்றித் தேர்ச்சிபெற்ற முதலாமவர் இவராவார். மாவட்ட கமநல சேவை உதவி ஆணையாளராக, நிந்தவூர் உதவி அரசாங்க அதிபராக, பின்னர் நிந்தவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

1993ல் ஓய்வு பெற்ற இவர், 41 வருடம் அரச சேவையில் இருந்தவர். 1952ஆம் ஆண்டு இருபதாவது வயதில் ஆங்கில மொழி ஆசிரியராக முதல்நியமனம் பெற்றார்.  1956-1958  காலப்பகுதியில் பேராதனை விவசாயக் கல்லூரியில் விவசாய டிப்ளோமா பயிற்சியை முடித்து – கல்லோயா அபிவிருத்தி சபையில் குடியேற்ற அதிகாரியானர்.  1958ல் கமநல சேவையில் பெரும்போகஉத்தியோகத்தராகப் பணியாற்றினார்.

ஓய்வு பெற்ற பின்னர் இவரின் பணி நின்று விடவில்லை. தென்கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாக ஆலோசகராக, முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.ஏ. மன்சூரின் இணைப்புச் செயலாளராக, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் பிரத்தியேக நிர்வாக உத்தியோகத்தராக இவரின் பணி தொடர்ந்தது.

சமூக சேவையில் ஈடுபாடு காட்டிவரும் இவர், பல்வேறு சமூகநல அமைப்புக்களிலும் பிரதிநிதித்துவம் வகிக்கின்றார்.

ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை தேசியக் கல்லூரியில் கற்றார். 05 ஆம் வகுப்பு புலமைப் பரீட்சையில் ‘ஏ’ தரத்தில் சித்தி பெற்றமையினால் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்க மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரிக்குத் தெரிவானார். பரீட்சைகளில் இவர் காட்டிய அதீத திறமைகளால், இரட்டை வகுப்பேற்றங்களைப் பெற்றார்.

க.பொ.த. சாதாரண, உயர்தர பரீட்சைகளை ஆங்கில மொழிமூலம் இவர் கற்றுத்தேறினார்.

இவர் இன்னும் பல்லாண்டு காலம் நிறை நலத்தோடு வாழ்ந்து, தனது சீரான பணிகளைத் தொடர வேண்டுமென்பதே நமது பிரார்த்தனையாக இருக்கின்றது.

Comments