எதிர்ப்புக்கு மத்தியில் இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சினை வைத்திருக்க விரும்பவில்லை: காதர் மஸ்தான்

🕔 June 14, 2018

“இந்து மக்களின் ஆதங்கங்களைக் கருத்திற் கொண்டு, ஒற்றுமையாக வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சிலிருந்து இந்து சமய அலுவல்கள் எனும் பொறுப்பினை மீளக் கொடுத்து விட்டேன்” என்று, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்ட இந்து மத விவகார பிரதி அமைச்சுப் பொறுப்பினை, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மீளப்பெற்றுள்ளார்.

இந்தத் தகவலை பிபிசி தமிழிடம் காதர் மஸ்தான் இன்று வியாழக்கிழமை மாலை உறுதிப்படுத்தினார்.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை – அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சர்களாக இருவரும், பிரதியமைச்சர்களாக ஐந்து பேரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி மைத்திரி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முஸ்லிம் ஒருவரிடம் – இந்து சமய அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக, தமிழர் சமூகத்திலிருந்து ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியிருந்ததோடு, அந்த நியமனத்துக்கு எதிராக சில இந்து அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தன.

இதனையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட பிரதி அமைச்சிலிருந்து இந்து சமய அலுவல்கள் பொறுப்பினை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதியிடம் இன்று வியாழக்கிழமை தான் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கிணங்க அந்தப் பொறுப்பினை ஜனாதிபதி மீளப்பெற்றுக் கொண்டதாகவும் பிபிசி தமிழிடம் காதர் மஸ்தான் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “அனைத்து சமூக மக்களையும் அனுசரித்துக்கொண்டுதான் எமது வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனது பகுதியில் பெரும்பான்மையாக இந்து மக்களே உள்ளனர். எனக்கு வாக்களித்தவர்களில் கணிசமானோர் இந்து மக்கள். அவர்கள் எனக்கு வழங்கப்பட்ட இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சுப் பதவியை வைத்திருக்குமாறு என்னிடம் கூறிகின்றனர், ஆனல் வேறு சில தரப்பினர் அதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றனர்” என்றார்.

“எனவே, ஒரு தரப்பினரின் எதிர்ப்புடன் அந்தப் பொறுப்பினை வகிக்க நான் விரும்பவில்லை. ஆகையினால்தான், எனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சில் இருந்து, இந்து சமய அலுவல்கள் பொறுப்பினை மீள வழங்குவதற்குத் தீர்மானித்தேன்”.

“அந்த வகையில், இன்று ஜனாதிபதியைச் சந்தித்து எனது நிலைப்பாட்டினை வெளியிட்டேன். அதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, இந்து சமய அலுவல்கள் பிரதியமைச்சுப் பொறுப்பினை என்னிடமிருந்து மீளப்பெற்றுக் கொண்டார். உண்மையாகவே, இந்த பிரதிமைச்சுப் பதவி எனக்கு வழங்கப்படும்போது, அதில் இந்து சமய அலுவல்கள் என்கிற பிரதியமைச்சுப் பொறுப்பு உள்ளமை பற்றி எனக்குத் தெரியாது”.

“எவ்வாறாயினும் துலிப் விஜேசேகர எனும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் – அஞ்சல் அலுவல்கள், தொடர்பாடல் மற்றும் முஸ்லிம் சமய பிரதியமைச்சராக இரண்டு வருடங்கள் பதவி வகித்திருக்கிறார். சிலவேளை, இன நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு வழங்கியிருக்கலாம். அப்போது துலிப் விஜேசேகர முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமையை முஸ்லிம்கள் ஒத்துக் கொண்டார்கள். ஆனால், இந்து சமய பிரதியமைச்சராக நான் நியமிக்கப்பட்டமையினை இந்துக்கள் ஒத்துக் கொள்ளவில்லை”.

“எனவே, இந்து மக்களின் ஆதங்கங்களைக் கருத்திற் கொண்டு, ஒற்றுமையாக வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு வழங்கப்பட்ட பிரதியமைச்சிலிருந்து இந்து சமய அலுவல்கள் எனும் பொறுப்பினை மீளக் கொடுத்து விட்டேன்” என்றார்.

நன்றி: பிபிசி

Comments