உங்கள் குடும்பப் பெண்களை பேசியிருந்தாலும், இப்படித்தான் இருப்பீர்களா: தெ.கி. பல்கலைக்கழக உபவேந்தரை நோக்கி மாணவி கேள்வி

🕔 June 13, 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவியர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில், உயர் கல்வி அமைச்சர் பேசியமை போல், உங்கள் குடும்பப் பெண்களைப் பற்றி யாரும் அசிங்கமாகப் பேசினாலும், இவ்வாறுதான் மௌனம் காப்பீர்களா என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நோக்கி, பல்கலைக்கழக மாணவி ஒருவர் கேள்வி தொடுத்துள்ளார்.

‘புதிது’ செய்தித்தளத்துக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவியொருவர் அனுப்பி வைத்துள்ள பதிவு ஒன்றிலேயே, அந்தப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமை குறிப்பிட்டு, மேற்படி மாணவி இந்தக் கேள்வியினை தொடுத்துள்ளார்.

மேற்படி மாணவி அனுப்பி வைத்துள்ள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் – சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் கொடுக்காமல், சில பாடங்களில் சித்தியடைய முடியாது என்று, உயர் கல்வி அமைச்சர் கூறியுள்ளமை அருவருக்கத்தக்கதாகும்.

அமைச்சரின் இந்த கேவலமான கருத்தானது, இந்தப் பல்கலைக்கழகத்தில் கற்ற, கற்றுக் கொண்டிருக்கிற மாணவியர்களின் நற்பெயர்களுக்கு இழுக்கினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, எமது பல்கலைக்கழகத்தின் ‘தந்தை’ எனும் நிலையிலுள்ள உபவேந்தர், அமைச்சரின் முட்டாள்தனமான கருத்துக்கு பதிலடி கொடுத்து, தனது மாணவியர்களின் பெயரைக் காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதனை அவர் இதுவரை செய்யவில்லை. ஊடகங்கள் இதுபற்றி உபவேந்தரிடம் கேட்டபோது, “அது அமைச்சரின் கருத்து, அது தொடர்பில் நான் எதுவும் கூறமாட்டேன்” என, உபவேந்தர் தெரிவித்திருக்கின்றார்.

உபவேந்தர் அவர்களே, உங்கள் குடும்பப் பெண்களின் நடத்தை குறித்து யாராவது அசிங்கமாகப் பேசியிருந்தாலும், இப்படித்தான் மௌனம் காப்பீர்களா? எங்கள் தந்தையர்கள் அவ்வாறு மௌனமாக இருக்க மாட்டார்கள். எங்கள் தந்தையர்கள் ரோசமுள்ளவர்கள் என்பதால், தமது வீட்டுப் பெண்கள் குறித்து அவதூறு சொல்கின்றவர்களை வெறுமனே கடந்து செல்ல மாட்டார்கள். அப்படிச் செல்பவர்கள் பொறுப்பு மிகுந்த தந்தையர்களாக இருக்கவும் முடியாது.

ஆனால், நீங்கள் தலைமை வகிக்கும் பல்கலைக்கழகத்தின் மாணவியர்கள் குறித்து, அவதூறு பேசப்பட்டமை பற்றி, நீங்கள் எதுவித சொரணையும் அற்றவராக இருக்கின்றீர்கள். இப்படிப்பட்ட ஒருவரை எமது பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கொண்டுள்ளமை எண்ணி, நாங்கள் வெட்கமடைகிறோம்.

நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள் என்றால், எமது பல்கலைக்கழகத்துக்கு நீங்கள் வேண்டாம். நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ, அந்த களனி பல்கலைக்கழகத்துக்கே சென்று விடுங்கள். நீங்கள் உபவேந்தராக இருக்கின்ற பல்கலைக்கழக மாணவியர்களின் நடத்தையை அசிங்கப்படுத்தி – ஒரு முட்டாள் பேசியிருப்பதற்கு பதிலளிக்கக் கூட வக்கற்ற நீங்கள், வேறு எந்த நன்மையினைத்தான் எமக்குச் செய்து விடப் போகிறீர்கள்.

நீங்கள் அடுத்த முறையும் எமது பல்கலைக்கழகத்துக்கு உபவேந்தராக வரவேண்டும் என்பதற்காகத்தானே, உயர் கல்வி அமைச்சரின் முட்டாள்தனமான உரைக்கு பதிலளிக்காமல் இருக்கின்றீர்கள்?

உங்கள் கதிரையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, எதையும் பலி கொடுக்கும் ஜாதியாக நீங்கள் இருப்பதையிட்டு உங்களுக்கு அவமானமாக இல்லையா?

எனது பார்வையில், உயர் கல்வி அமைச்சரைவிடவும், நீங்கள்தான் கேவலமாகத் தெரிகிறீர்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்