முஸ்லிம் காங்கிரஸும், ‘மொனொபொலி’ அரசியலும்

🕔 September 2, 2015

Article - 12
கீ
ரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்பார்கள். எதிர்க்கடை இல்லாத கீரைக்கடை இருப்பது நுகர்வோனுக்கு நல்லதல்ல. அந்த நிலைவரமானது, கீரைக்கடை முதலாளிக்கு சந்தையில் ‘ஏகபோக’ உரிமையினை ஏற்படுத்தி விடும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘மொனொபொலி’ (Monopoly) என்கிறார்கள்.

எதிர்க்கடையில்லாத கீரைக் கடைக்காரர் நேர்மையானவராக இருந்தால் பிரச்சினையில்லை. சிலவேளை, அந்தக் கடையில் மோசமானதொரு முதலாளி உட்கார்ந்திருந்தால், நுகர்வோனின் நிலைமை பரிதாபகரமானதாக மாறிவிடும். கீரைக் கடைக்காரர் சொல்வதுதான் விலை. அழுகிய கீரையை வைத்திருந்தாலும், வாங்கிக் கொண்டு செல்ல வேண்டியதுதான். கேள்வியெல்லாம் கேட்க முடியாது. கேட்டால், ‘விரும்பினால் வாங்கு – இல்லையென்றால் போ’ என்பார்.

இவ்வகையான ‘ஏகபோக’ சூழ்நிலையானது, கீரைக் கடையிலிருந்து, அரசியல் அரங்கு வரை, எல்லா இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலையடுத்து, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸானது, எதிர்க்கடையில்லாத கீரைக் கடையாக மாறியிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியலை மையப்படுத்தியும், மு.காங்கிரசுக்கு எதிராகவும் இயங்கிவந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகாமல் போய் விட்டார். மு.கா.வை நேரடியாக எதிர்த்துக் களமிறங்கிய அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் மயில் கட்சியும், அம்பாறை மாவட்டத்தில் தோற்றுப் போய் விட்டது. ஆனால், யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாகக் களமிறக்கப்பட்ட மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும், எதிர்பாராதளவு அதிக எண்ணிக்கையான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்கள்.

இப்போது, அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் அரங்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையானது, இம் மாவட்ட முஸ்லிம் அரசியல் அரங்கில், முஸ்லிம் காங்கிரசுக்கு ஏகபோக உரிமையினை உருவாக்கி விட்டிருக்கிறது. இந்த நிலைவரத்தினை, இங்குள்ள மு.கா.வின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் எப்படிக் கையாளப் போகின்றார்கள் என்பதுதான் அவதானத்குரியதாகும்.

அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பாக, யானைச் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் கடந்த நாடாளுமன்றிலும் உறுப்பினர்களாக இருந்தவர்கள். மூன்றாமவரான எம்.ஐ.எம். மன்சூர் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்தவர். இப்போதுதான் முதன்முறையாக நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருக்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது, அம்பாறை மாவட்டத்தில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிட்டமை குறித்து அறிவீர்கள். இந்த நிலையில், மு.காங்கிரஸ் எத்தனை வேட்பாளர்களைக் களமிறக்குவது என்பதில், பல்வேறுபட்ட இழுபறிகள் நிலவின. கடைசியில், மூன்று முஸ்லிம் வேட்பாளர்களையும், சத்தமில்லாமல் நான்காவதாக – சிங்கள வேட்பாளரொருவரையும் அந்தக் கட்சி களமிறக்கியது.

முஸ்லிம் காங்கிரஸ் களமிறக்கிய மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும், அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு – ஒவ்வொரு தேர்தலிலும், பார்த்துப் பார்த்துச் சலித்த முகங்களாக இருக்கின்றன. இன்னொருபுறம், இந்த மூன்று வேட்பாளர் தொடர்பிலும், மு.கா. ஆதரவாளர்கள் குறிப்பிடத்தக்களவு அதிருப்திகளைக் கொண்டிருந்தனர். இதனால், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், மு.காங்கிரஸ் சார்பாக – மாற்று முகங்கள் களமிறக்கப்பட வேண்டுமென அந்தக் கட்சியின் பெருமளவான ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆகக்குறைந்தது, இந்த மூன்று பேருடன், புதிதாக – இரண்டு மூன்று வேட்பாளர்களையாவது, கட்சி களமிறக்கும் என்று மு.கா. ஆதரவாளர்கள் நம்பினார்கள். ஆனால், இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் தகர்த்தெறியும் வகையில், மீண்டும் அந்தச் ‘சலிப்புக்குரிய’ முகங்களையே, கடந்த பொதுத் தேர்தலில் – மு.கா. தலைவர் களமிறக்கி விட்டிருந்தார்.

மேற்படி மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை மட்டும், நடந்து முடிந்த தேர்தலில் களமிறக்கியமைக்கு, மு.கா. தலைவரிடத்தில் ஆயிரத்தெட்டு காரணங்கள் இருந்தன. அதேவேளை, வேட்பாளர் நியமனம் தொடர்பில் – கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பிலிருந்த நியாயங்கள் தொடர்பிலும், மு.கா. தலைவர் ஹக்கீம் அறிந்திருந்தார் என்பதை, அவரின் தேர்தல் கால – மேடைப் பேச்சுகள் வெளிப்படுத்தியிருந்தன.

மு.காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்பட்டிருந்த வேட்பாளர்களில், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோரில், ஹரீஸ் – கணிசமானளவு அதிருப்தியினை, கட்சி வாக்காளர்களிடத்தில் சம்பாதித்திருந்தார். முன்னைய நாடாளுமன்றத்தில் ஹரீஸ் உறுப்பினராக இருந்தபோது, அவரை – கட்சி ஆதரவாளர்கள் தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியாமலிருந்தது. அநேகமான நேரங்களில், அவரின் கையடக்கத் தொலைபேசி ‘மூடப்பட்ட’ நிலையில்தான் இருக்கும். மேலும், சுறுசுறுப்பான அரசியல் செயற்பாடுகள் ஹரீசிடம் குறைவாகவே காணப்பட்டன. மாவட்டமெங்கும், பரவலாகச் சென்று – மக்களைச் சந்திப்பதில், ஹரீஸ் மிகவும் சோம்பேறியாக இருந்தார். இதனால், அவரின் ஆதரவாளர்களுக்கே, அவரை ‘ஆடிக்கொரு முறை, கோடைக்கொரு முறை’தான் காணக்கிடைத்தது.

ஆனால், இந்த விடயத்தில் பைசால் காசிம் பரவாயில்லை. எந்த நேரத்திலும் அவரை பொதுமக்கள் தொலைபேசியில் பிடித்துக் கொள்ளலாம். எல்லோருக்கும் பதிலளிப்பார். ஹரீசோடு ஒப்பிடுகையில் சுறுசுறுப்பாக அரசியல் செய்பவர். ஆனால், நாசுக்கான அரசியல் தெரியாதவர். அதனால், அவரின் கட்சிக்குள் இருக்கின்ற, அவரின் ஊரைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகளை, தன்வசப்படுத்திக் கொள்ளத் தெரியாமல், நீண்ட காலமாக முரண் அரசியல் செய்து வருகின்றார். கடந்த ஐந்து வருடங்களிலும், ஐந்து தடவைகளாவது நாடாளுமன்றில் இவர் பேசியிருப்பாரா என்பது சந்தேகம்தான். இந்த முறையாவது – நாடாளுமன்றில் ‘எதையாவது’ பேச வேண்டும் என்கிற உறுதிமொழியினை பைசால் காசிம் எடுக்க வேண்டும்.

மூன்று வேட்பாளர்களிலும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சூர், மக்களிடத்தில் அதிகமான அதிருப்திகளையும், வேண்டியளவு வெறுப்புக்களையும் சேர்த்து வைத்திருக்கின்றார். தனது சொந்த ஊரான சம்மாந்துறையிலேயே மன்சூர் செல்வாக்கினை இழந்துள்ளார். அதனால், கடந்தமுறை நடைபெற்ற சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் – மன்சூர் போட்டியிட்டபோதும், எதிர்க்கட்சி ஆசனத்திலேயே அவரால் அமர முடிந்தது. தனது பிரதேசத்திலுள்ள மு.காங்கிரஸ்காரர்களையே மன்சூர் மதிப்பதில்லை என்பது, இவர் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டாகும். ஆனால், மூன்று வேட்பாளர்களிலும் மன்சூர் – நல்ல பேச்சாளர்.

இவ்வறான லட்சணங்களைக் கொண்ட மூவரையும், மு.காங்கிரஸ் களமிறக்கியமையானது, இந்தத் தேர்தலில் அந்தக் கட்சி எதிர்கொண்ட மிகப்பெரும் சவாலாக இருந்தது. மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட வாக்காளர்கள், கட்சித் தலைவர் ஹக்கீமை காணுகின்ற இடங்களிலெல்லாம், வேட்பாளர் நியமனம் தொடர்பில், அவர்கள் கொண்டிருந்த அதிருப்திகளை வெளிப்படுத்தினார்கள். தாம் அதிருப்தி கொண்டுள்ள மூன்று வேட்பாளர்களை மட்டும், இந்தத் தேர்தலில் நிறுத்தியதன் மூலம், தமது மாற்று விருப்பத்தினை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக உரிமையினை, மு.கா. தலைவர் ஹக்கீம் இல்லாமலாக்கி விட்டார் என்று, அவரின் முகத்திலேயே – கட்சி ஆதரவாளர்கள் சொன்னார்கள்.

இவ்வாறானதொரு நிலையில், மேற்படி மூவரையும் – வேட்பாளர்களாக நிறுத்தியமைக்குரிய காரணங்களை, மு.கா. தலைவர் ஹக்கீம் – தனது கட்சி ஆதரவாளர்களுக்கு, பட்டும் படாமலும் தெளிவுபடுத்தி வந்தார். வேட்பாளர்கள் மீதுள்ள அதிருப்திகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, இந்தத் தேர்தலில், தலைவர் போட்டியிடுவதாக நினைத்துக் கொள்ளுமாறும், மூன்று வேட்பாளர்களின் இலக்கங்களும் – தலைவரின் இலக்கமென நினைத்துக் கொண்டு வாக்களிக்குமாறும், தனது கட்சிக்காரர்களிடம் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

மேலும், ஒவ்வொரு வேட்பாளருடனும் பிரச்சினைப்பட்டுக்கொண்டு, மு.காங்கிரசுக்கு எதிராக – இந்தத் தேர்தலில் செயற்படுவதற்குத் தயாராக இருந்த நபர்களையும், குழுக்களையும் – ஹக்கீம் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களுடன் பேசி சமாதானப்படுத்தினார். கிட்டத்தட்ட, அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் மு.கா. தலைவர் ‘மடித்துக்கட்டி’க் கொண்டு களமிறங்கியிருந்தார். அதனால்தான், மேற்படி மூன்று வேட்பாளர்கள் மீதும் கொண்டிருந்த அதிருப்திகளையெல்லாம் ஒருபுறம் வைத்து விட்டு, தமது கட்சித் தலைவரின் கௌரவத்துக்காக, இந்த மூன்று வேட்பாளர்களுக்கும், மு.கா. ஆதரவாளர்கள் வாக்களித்தார்கள். இல்லாவிட்டால், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கே, மு.காங்கிரஸ் – இந்தத் தேர்தலில் குத்துக்கரணம் அடித்திருக்க வேண்டியிருக்கும்.

இப்படியானதொரு சூழ்நிலையில் வெற்றிபெற்ற – மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், இனியாவது தமது பலவீனங்களைக் களைந்து செயற்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் வெற்றிபெற்றுள்ள மு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவர் குறித்தும், மக்கள் கொண்டுள்ள அதிருப்திகள் எவை என்பதை, குறித்த உறுப்பினர்கள்; அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, அவற்றினை இங்கு பதிவு செய்திருக்கின்றோம். இவை தொடர்பில், குறித்த உறுப்பினர்கள் மூவரும் அதிக கவனம் செலுத்துவது, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிக்கும் நலவாக அமையும்.

சிலவேளை, தமக்குக் கிடைத்திருக்கும் ஏகபோக அரசியலில் மதிமயங்கி, தனிக் காட்டு ராசாக்கள் போல், மு.கா.வின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் செயற்படுவார்களாயின், அதனால் ஏற்படும் விளைவுகள் அவர்களுக்கு – பாரதூரமாக அமைந்து விடும்.

அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரசுக்கு எதிராக அரசியல் செய்வதற்கு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை என்றாலும் கூட, ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை அதிக விருப்பு வாக்குகள் பெற்று, நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான தயா கமகே, மு.காங்கிரசின் கண்ணுக்குள் விழுந்த தூசாக இருந்து வருகின்றார் என்பது, மறைக்க முடியாத உண்மையாகும். முன்னர், மு.காங்கிரஸ் மீது அதிருப்தி கொள்கின்றவர்கள் – அதாஉல்லாவின் முகாம் நோக்கியாயினும் சென்றார்கள். ஆனால், இப்போது, மு.கா. அதிருப்தியாளர்களுக்கு அந்தத் தெரிவும் இல்லையென்பதால், அவர்கள் – தயாகமகேயிடம் அரசியல் தஞ்சமடைவதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக உள்ளன. மட்டுமன்றி, கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள மு.காங்கிரஸ்காரர்களை, ‘கொத்தி’க் கொண்டு போவதில், தயாகமகேயும் மிக ஆர்வமாக உள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரசின் கடைக்கு, எதிர்க்கடைகள் இருந்தபோது நிலவிய ஆபத்துக்களை விடவும், இப்போதைய ‘மொனொபொலி’ அரசியல் சூழ்நிலையானது மிகவும் ஆபத்துக்கள் நிறைந்தவையாகும்.

‘புத்தியுள்ள பிள்ளைக்கு செவ்வரத்தம் பூ நஞ்சில்லை’ என்பார்கள். மு.காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இந்தக் கட்டுரையும் அப்படித்தான்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (01 செப்டம்பர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்