தெ.கி.பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்: உயர் கல்வி அமைச்சரின் உரைக்கு பின்னணியில் உபவேந்தரே உள்ளார்: ஆசிரியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு

🕔 June 10, 2018

– மப்றூக் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில விரிவுரையாளர்கள் மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக, உயர் கல்வி அமைச்சர் கூறிய விடயம், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, தாம் சந்தேகம் கொள்வதாக, அந்தப் பல்லைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்கள், அங்குள்ள மாணவிகளிடம் பாலியல் லஞ்சம் கோருவதாகவும், பாலியல் லஞ்சம் வழங்காமல் சில பாடங்களில் அங்குள்ள மாணவிகள் சித்தியடைய முடியாது என்றும், உயர் கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஷபக்ஷ நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூறினார்.

இவ்விடயம் தொடர்பில், ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பருக்கு கருத்து தெரிவிக்கும் போதே, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்க தலைவர் ஜப்பார் மேற்படி சந்தேகத்தை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“அண்மையில் உயர் கல்வி அமைச்சரை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் சந்தித்தோம். அப்போது, பல்கலைக்கழகத்தில் நிலவும் சில பிரச்சினைகள் பற்றியே அமைச்சரிடம் நாங்கள் பேசினோம். பாலியல் விவகாரங்கள் தொடர்பில் நாங்கள் எதையும் அமைச்சரிடம் கூறவில்லை.

ஆனால், அமைச்சரின் இந்த உரைக்குப் பின்னால், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் இவ்வாறான பாலியல் லஞ்சக் கதையினை உபவேந்தர் கூறியிருக்கலாம். அதனை அமைச்சரிடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பார் என்பதுதான் எங்கள் சந்தேகமாகும்.

ஏனென்றால், நாங்கள் உயர்கல்வி அமைச்சரைச் சந்தித்த அன்று, மற்றொரு சந்திப்பு உயர்கல்வி ராஜாங்க அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உள்ளிட்டோருடனும் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டோம்.

இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் பல்கலைக்கழகத்திலுள்ள பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறினோம். அப்போது மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் இடைமறித்து; ‘உங்கள் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விடயங்களெல்லாம் எங்களுக்குத் தெரியும். அங்கு பாலியல் விடயங்கள் நடக்கின்றன. விரிவுரையாளர்கள் பாடங்களுக்குப் போவதில்லை, அதேபோன்று உபவேந்தரை வேலை செய்வதற்கு அங்குள்ள ஒரு கூட்டம் விடுவதில்லை’ என்று கூறினார்.

இதன்போது, அங்கிருந்த அமைச்சர் தயாகமகே; ‘நீங்கள் அப்படி பொதுவாகக் கூறக் கூடாது. அது தவறு. அங்குள்ள ஒரு சிலர் அப்படி நடந்து கொள்ளக் கூடும். அதற்காக ஒட்டுமொத்தமாக குறை சொல்லக் கூடாது’ என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவரைப் பார்த்துக் கூறினார்.

மேலும் அங்கிருந்த எமது பல்கலைக்கழக விரிவுரையாளர் சப்ராஸ் என்பவரும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம், அவர் சொல்வது தவறு என்றும், ஒருவர் செய்த தவறுக்கு, அனைவரையும் குற்றம் சொல்லக் கூடாது எனவும் கூறி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்; ‘என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. நான் தண்டனை வழங்குவேன்’ என்றார். அப்போது நாங்கள்; ‘அப்படியான குற்றத்தினைச் செய்தவர்களைத் தண்டிக்கும் உங்கள் செயற்பாட்டுக்கு நாங்களும் உதவுவோம்’ எனத் தெரிவித்தோம்.

மேலும், ‘இவ்வாறான பிழையான தகவல்களை எங்கள் பல்கலைக்கழக உபவேந்தர் உங்களுக்கு வழங்கி, உங்களை பிழையாக வழிநடத்துகிறார்’ என்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் நான் கூறினேன்.

அதேவேளை, அங்கிருந்த கலாநிதி ஜுனைதீன் என்பவரும் தனது கருத்தை அங்கு வெளியிட்டார். ‘உபவேந்தர் நாஜிம், எமது பல்கலைக்கழகத்தைப் பற்றி வெளியிடங்களில் பகிரங்கமாகவே மோசமாகவும், அவமானப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். கடந்த வருடம் கோப் குழு முன்னிலையில், எமது பல்கலைக்கழகத்தில் பாலியல் விவகாரங்கள் நடைபெறுவதாகக் கூறியிருந்தார். எமது பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்து கொண்டு, இவர் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று, கலாநிதி ஜுனைதீன் அங்கு கருத்து வெளியிட்டார்” என்றார்.

Comments