தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பறிபோவதற்கு முன்னரான, அபாயமணிச் சத்தம்

🕔 June 9, 2018

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் –

யர் கல்வியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் பின்னர், தெ.கிழக்கு பல்கலைக் கழகம் மீண்டுமொருமுறை சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றது. ஒரு விரிவுரையாளரோடு சம்பந்தப்பட்ட சம்பவம் ( பாலியல் லஞ்சம்) அமைச்சரினால் பொதுமைப்படுத்தப்பட்டதே இதற்கான பிரதான காரணமாகும்.

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்த பின்னர், அவர்காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் அமைச்சர் நேற்று நாடாளுமன்றில் பிரஸ்தாபித்தார்.

அதன் பின்னர், பல்கலைக்கழகத்தில் நிருவாக முறை கேடுகளும் பாலியல் சேஷ்டைகளும் இடம் பெறுவதாகக் அமைச்சர் கூறியமை மற்றும் விரிவுரையாளர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு இந்த விடயங்களை பொதுமைப்படுத்த முயன்றமையானது, பல்கலைக் கழகத்தின் மீது அக்கறையும் அதன் வளர்ச்சியில் ஆர்வமும் கொண்ட பலரை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

விரிவுரையாளரோடு சம்பந்தப்பட்ட அந்தப் பிரச்சினை முன்னாள் உபவேந்தரின் காலத்தில் இடம்பெற்ற சம்பவமல்ல . அது தற்போதை உபவேந்தரின் காலத்தில் நடைபெற்றது. மேலும், அந்த விடயம் தற்போது விசாரணையில் உள்ளது . இதனை முன்னாள் உபவேந்தரின் ‘ஊழல்’ சம்பவத்தோடு சேர்த்துக் குறிப்பிடக் காரணம், பெரும்பான்மையாக முஸ்லிம்களைப் பிரதானிகளாக் கொண்ட பல்கலைக்கழக நிருவாகம் பிரச்சினையானது என நிறுவுவதாகும்.

இதன் மூலம் தற்போதைய உபவேந்தரின் சேவைக்காலம் முடிந்து, அடுத்த உப வேந்தராக யாரை நியமிப்பது என்பது தொடர்பான இழுபறிகள் நிலவும் இந்த வேளையில், பெரும்பான்மை இனத்தைச் சேர்த்த ஒருவரை நிருவாகத்துக்கு பொறுப்பாக்கி, தமது பிடியை அமைச்சர் படிப்படியாக இறுக்கி, இப் பல்கலைக்கழகத்தினுள் தமது பேரினவாத நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றும் ஒரு முயற்சியா என்னும் சந்தேகத்தைப் பலமாக விதைக்கின்றது.

குறித்த பல்கலைக்கழகத்தில் இரு அணிகள் இருக்கும் விடயம் வெளிப்படையாகும் . தற்போதைய நிருவாகம் சிறப்பாக இயங்குகிறது என்பதை நிறுவ முன்னாள் நிருவாகத்தில் ஊழல்கள் சீர்கேடுகள் நிலவின என்னும் விடயம் பலமான பேசுபொருளாக தற்போதைய உபவேந்தருக்கு சார்பான அணியினரால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது. மறுபுறத்தில் , முன்னர் வினைத்திறனான நிருவாகம் இடம்பெற்றது தற்போது இருப்பவர் தூய்மைவாதம் பேசிக்கொண்டு வாளாவிருக்கின்றார். அவரோடு ஒட்டியிருக்கும் ஒரு குறித்த அணியினரின் தாளத்துக்கு மட்டுமே இயங்குகின்றார் என மாற்று அணியினர் குறிப்பிடுகின்றனர்.

“பல்கலைக்கழகத்தில் சீர்கேடுகள் இப்போதும் நிலவுகின்றனதான். அவற்றை படிப்படியாக நிவர்த்தி செய்து, சிறப்பான நிருவாகத்தை ஏற்படுத்துகிறேன் என்ற அடிப்படையில், தற்போதைய உபவேந்தரின் சேவைக்காலத்தை மேலும் நீடிக்க அவரது அணியினரால் தூக்கிப்பிடிக்கப்படும் விடயங்களினை அமைச்சர் தனது பேரினவாத நிகழ்ச்சிக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்” என்னும் குற்றச்சாட்டை நாம் முற்றுமுழுதாக ஒதுக்கிவிடமுடியாதபடிக்கு, அமைச்சரின் நேற்றைய பேச்சு அமைந்திருக்கின்றது

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க காலத்தில், கிழக்கு பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட சூழ் நிலையொன்றில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நிருவாகத்துக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்ட விடயத்தை இங்கே கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

கிழக்கு பல்கலைக்கழகம் போலல்லாது தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பெரும்பான்மை இன கடும்போக்கு மாணவர் அமைப்புகள் மற்றும் பிராந்திய அரசியல்வாதிகளின் வகிபாகம் அதிகம் என்பதை இங்கே கவனத்திகொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டவாறு ஒருவர் நியமிக்கப்படும் போது, அதனை நிரந்தரமாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் வழிவகைகள் இங்கே அதிகம் என்பதைப்பற்றி நாம் அதிகம் கரிசனை செலுத்த வேண்டியிருக்கிறது

எது எவ்வாறிருப்பினும் (குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், அவற்றைத் தூக்கிப்பிடிக்கும்) விஜயதாசவின் பேச்சு பல்கலைக் கழக நிருவாகம் சீராக இயங்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் உருவானதல்ல என்பதை மொத்த பல்கலைக் கழக சமூகமும் கவனிக்கத் தவறும் சந்தர்ப்பத்தில், எதிர்காலத்தில் ஏற்படும் கசப்பான விளைவுகளுக்கு அனைவரும் பொறுப்புக்கூறவேண்டி வரலாம்.

எனவே மேலும் மேலும் தமது சிரங்கைத் தோண்டி மற்றவருக்கு முகரக் கொடுக்கும் கலாச்சாரத்தை பல்கலைக்கழகத்தில் ஒழித்துக்கட்டி, வேற்றுமை மறந்து – பொது நன்மை கருதி அமைச்சரின் பேச்சுக் கெதிராக, தமது எதிர்ப்பைக் காட்ட ஒன்றிணையுமாறு குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அனைவரையும் வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.

Comments