வியாழேந்திரன் பொய் சொல்லி, சமூகங்களைக் குழப்புகின்றார்: ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

🕔 June 5, 2018
செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய புல்லுமலையில் அமைக்கப்படுகின்ற குடிநீர் போத்தல் உற்பத்தி தொழிற்சாலை விவகாரத்துடன் தனக்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலை சட்டத்துக்கு முரணாக அமைக்கப்படுவதாக கூறுபவர்கள், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரத்தில் எவ்வித சம்பந்தமும் இல்லாத தன்னை தொடர்பு படுத்தும் வகையில் விசமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தான் தொழிற்சாலை அமைப்பதற்காக எந்த ஒத்துழைப்புக்களையும் வழங்கவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை புல்லுமலையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
வியாழேந்திரனின் பொய்

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேற்று திங்கட்கிழமை செங்கலடி பெரிய புல்லுமலையில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்ததாக செய்திகள் ஊடாக அறிந்து கொண்டேன். இந்த விவகாரம் சம்பந்தமாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை பரப்பியுள்ளனர். அத்துடன் இதில் என்னையும் தொடர்பு படுத்தி விசமத்தனமான பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் படித்த ஒருவராக இருந்தும் அவர் இந்த விடயத்தை கையாண்ட விதம் மிகவும் கவலையளிக்கின்றது. அப்பட்டமான உண்மைக்கு புறம்பான பொய்களை அவர் புனைந்து – சோடித்து சிலரைக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

வியாழேந்திரன் எம்.பிக்கு இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகளோ, சந்தேகங்களோ இருக்குமாயின் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும். அல்லது சட்ட நடவடிக்கைக்கு சென்றிருக்க வேண்டும். இல்லையெனில் என்னுடன் அது பற்றி கலந்துரையாடியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் எங்கிருந்தோ 20-25 பேரை அழைத்து வந்து ஆர்ப்பாட்டம் செய்வது, படித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.
முஸ்லிம்களின் காணி 

குறித்த காணி தமிழர்களுக்கு சொந்தமானது எனவும் அதனை முஸ்லிம்கள் அபகரித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம்சாட்டியிருந்தனர். இது சம்பந்தமாக நான் சம்பந்தப்பட்ட முஸ்லிம் தரப்பினருடன்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடினேன். இந்த காணி முஸ்லிம்களது சொந்த பூர்வீக காணி எனவும், 100 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட காணி எனவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், அவர்களது காணியை கடந்த காலங்களில் வேறு தரப்பினரே அபகரித்திருந்ததாகவும், தற்போது அதனை மீட்டு தாம் வியாபார நடவடிக்கை மேற்கொள்ள முற்படும் போது இவ்வாறான போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

குறித்த காணியில் மரம் வெட்டுவதாகவும், மணல் அகழ்வதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது கூறியிருந்தனர். யாரேனும் வனத்துறையின் அனுமதியின்றி மரம் வெட்டுவதாக இருந்தால் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோன்று, பிரதேச செயலகத்தின் அனுமதியின்றி எவரேனும் மணல் அகழ்வதாக இருந்தால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும்.
அனுமதிபெற்ற நடவடிக்கை
தொழிற்சாலை நிர்மாணிக்கும் உரிமையாளர் தரப்புடன் பேசிய போது, அவர்கள் இந்த வேலைத்திட்டம் சகல அரச திணைக்களங்கள், செயலகங்கள்  ஊடாக அனுமதி பெறப்பட்டு சட்டரீதியாக மேற்கொண்டுள்ளதாகவே கூறுகின்றனர்.

எனவே, குறித்த தொழிற்சாலை சட்டத்துக்கு முரணாக மேற்கொள்வதாக கூறுபவர்கள் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் ஊடாக தமது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அத்துடன் இந்த பிரச்சினையை தீர்க்க சட்டரீதியாக பல வழிகள் இருக்கும் நிலையில், மக்களை குழப்பி ஆர்ப்பாட்டம் செய்வதன் ஊடாக அரசியல் சுயலாபம் அடைந்து கொள்ளவே வியாழேந்திரன் உள்ளிட்ட குழுவினர்  முனைகின்றனர்.

இந்த வேலைத்திட்டம் பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார அமைச்சு, சுற்றாடல் திணைக்களம் என சகல அரச திணைக்களங்கள், செயலகங்கள்  ஊடாக அனுமதி பெறப்பட்டு சட்டரீதியாக மேற்கொள்ளப்படுவதாக அதன் உரிமையாளர்கள் ஆவணங்களை காண்பித்துள்ளனர். இதை தெரிந்து கொண்டும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் எந்தவித சம்பந்தமும் இல்லாத என்னையும் இதனுடன் தொடர்பு படுத்தியுள்ளனர்.
வீண் பழி

இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள நான் எந்த ஒத்துழைப்பும் வழங்கியது கிடையாது. அவ்வாறிருக்கும் நிலையில் என் மீது வீண் பழி சுமத்துகின்ற முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர்.
பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் பதவி என பல பொறுப்புக்களில் உள்ள வியாழேந்திரன் எம்.பி. இவ்வாறான சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தொடர்ந்தும் கூறுவாராயின் அதற்கு எதிராக அவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பொய்யான கருத்துக்களை பரப்புவதன் மூலம் இரு சமூகங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முற்படுவது கவலைக்குரிய செயற்பாடாகும். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வளர்ச்சியடைந்து வருவதை பொறுத்துக் கொள்ளாதவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்தி வருகின்றனர்.

Comments