சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்

🕔 June 5, 2018
எல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குள், மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

கால்நடை மருத்துவரின் ஒப்புதல் மற்றும் சான்றுகள் இதற்காக வலியுறுத்தப்பட்டுள்ளன. அதனையும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அதிகாரிகள் பரிசோதனை செய்து ஒப்புதல் வழங்குவார்கள். அவ்வாறு கொண்டு வரப்பட்ட கால்நடைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைக்கு உரியவாறு இல்லையென்றால், அவற்றை கொல்வது வழக்கம். அந்த கால்நடைகள் மூலம் மற்ற விலங்குகளுக்கு நோய் பரவாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடான பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்று, எல்லை தாண்டி சமீபத்தில் அண்டை நாடான செர்பியாவிற்குள் நுழைந்துள்ளது. பல்கேரிய எல்லையோர கிராமமான கொபிலோசியில் வசித்து வரும் இவான் என்பவருக்கு சொந்தமான பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. அவற்றில் பென்கா என்ற பசு மேய்ந்து கொண்டிருந்தபோது வழிதவறி அருகில் இருந்த செர்பிய நாட்டிற்குள் நுழைந்து விட்டது.

அங்கு சிறிது தூரம் சென்று பசு மேய்ந்தது. பல்கேரிய எல்லையை தாண்டி பசு ஒன்று நுழைந்ததை கண்ட செர்பிய விவசாயிகள் அவற்றை அங்கு கட்டினர். பின்னர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. கர்ப்பமாக இருந்த அந்த பசு பல்கேரியாவை சேர்ந்தது என்ற விவரம் தெரிய வரவே, சம்பந்தப்பட்ட பண்ணை உரிமையாளர் இவானுக்கு தகவல் தரப்பட்டு பின்னர் பசு ஒப்படைக்கப்பட்டது.

இங்கு தான் பிரச்சினை ஆரம்பித்தது. பல்கேரிய பசு என்றாலும் அது எல்லை தாண்டி சென்றதால், அதற்கு நோய் தாக்குதல் அல்லது கிருமி பாதிப்பு ஏற்பட்டிருக்கூடும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர். இதனால் அந்த பசுவை கொன்று விட அவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதன் உரிமையாளர் இவான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விதிமுறை வெளிநாட்டு கால்நடைகளுக்குதான் பொருந்தும் என்றும், வெளிநாடு சென்று வந்ததால் தனது பசுவுக்கு இது பொருந்தாது என்றும் கொந்தளித்தார்.

ஆனால் அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. பசுவுக்கு சோதனை நடந்து அதற்கு தற்போது பாதிப்பு ஏதும் இல்லை என்ற விவரம் தெரிய வந்தது. ஆனாலும் வெளியில் உடனடியாக தெரியாத கிருமி ஏதேனும் தாக்கி இருக்கலாம் அதனால் கொல்வதை தவிர வேறு வழியில்லை எனக் கூறினர்.

ஆனால் பசு கர்ப்பமாக இருப்பதால் அதனை கொல்வதற்கு பல்கேரியாவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த பசுவை தனித்து வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. எனினும் எப்போது வேண்டுமானாலும் அது கொல்லப்படலாம் என்ற சூழல் உள்ளது.

இந்த நிலையில், கர்ப்பமான அந்த பசுவை கொல்லக்கூடாது என விலங்கின ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். பசுவை காப்பாற்றக்கோரி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிரபலங்களும், விலங்கின ஆர்வலர்களும் சமூகவலைதளங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனினும் ஒரு பசுவுக்காக ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளில் மாற்றங்கள் செய்வதை ஏற்க முடியாது என மற்றொரு தரப்பினர் வாதம் செய்து வருகின்றனர்.

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் பிளோக் அந்த பசுவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் அந்த பசுவுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments