மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

🕔 May 24, 2018

– ஏ.எல். நிப்றாஸ் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீட மாணவா்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் அந்த மாணவா்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இன்று வியாழக்கிழமை கவன ஈா்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனா்.

வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவா்களுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மாணவா்கள் பேரணியாக சென்றதுடன், பல்கலைக்கழகம் முன்பாக  அமர்ந்து போராட்டம் மேற்கொண்டதோடு, அவ்விடத்தில் கொள்கை விளக்கக் கூட்டத்தையும் நடத்தினர்.

பல்கலைக்கழக நிர்வாகம் சகட்டுமேனிக்கு மாணவா்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், அசாதாரண அடிப்படையிலான வகுப்புத்தடையை நீக்கி, பரீட்சை எழுதும் உரிமை உட்பட மாணவர்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாணவா்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதேவேளை மாணவ பிரதிநிதிகள் இங்கு உரையாற்றுகையில்;

“இப் பிரச்சினைக்கு எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நிரந்தர தீா்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இன்று ஆரம்பித்துள்ள இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதுடன், இதைவிட நூறுமடங்கு மாணவா்கள் வீதிக்கு இறங்குவார்கள்” என்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்