பற்றுச் சீட்டு வேறு, நகை வேறு; சத்தியமிட்டுச் சொல்கிறார் சிலோன் ஜுவல் ஹவுஸ் உரிமையாளர்

🕔 May 24, 2018

‘கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்’ எனும் தலைப்பில், புதிது செய்தித்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில், சிலோன் ஜுவல் ஹவுஸ் நிறுவவன உரிமையாளர், மறுப்புச் செய்தியொன்றினை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கல்முனையிலுள்ள ‘சிலோன் ஜுவல் ஹவுஸ்’ நிறுவனத்தில் நகையைக் கொள்வனவு செய்து ஏமாந்ததாகக் கூறப்படும் முனாஸ் என்பவரின் தகவலுக்கமைவாக, இம்மாதம் 17ஆம் திகதி அந்தச் செய்தியை நாம் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையிலேயே சிலோன் ஜுவல் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் தமது விளக்கத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

அதன் முழு விபரம் வருமாறு;

சிலோன் ஜுவல் ஹவுஸ் எனும் எமது நிறுவனம் கடந்த 20 வருடங்களாக வாடிக்கையாளர் நன்மதிப்பை பெற்று மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டுவருகிறது.

எமது நிறுவனத்தைப் பற்றி புதிது இணையதளத்திலும், அதனைத் தொடர்ந்து முகநூல் வாயிலாகவும் வெளியாகிய கசப்பான செய்தி மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியிருந்தது.

சகோதரர் முனாஸ் என்பவர் குறிப்பிட்டது போலல்லாது அவர் கொண்டுவந்த பொருளுக்கும், பற்றுச்சீட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதே உண்மையாகும்.

2012ம் ஆண்டு தங்கத்தின் பெறுமதி மிக உச்ச கட்டத்தில் இருந்தது. 22Kt – 62,000/= ஆகவும், KDM – 56,000/= ஆகவும் இருந்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

சகோதரர் முனாஸ் காட்டிய பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது “KDM தோடு”வகையைச் சேர்ந்தது. ஆனால் சகோதரர் முனாஸ் கொண்டுவந்து காட்டிய பொருள் “கராப்பு” வகையைச் சேர்ந்தது. இது குறித்த செய்தியை பார்த்த நகை வியாபாரம் செய்யும் எல்லோருக்கும் புரியக்கூடிய விடயம்.

பற்றுச்சீட்டில் போடப்பட்ட நிறை 2க்கு 350 குறைய. அதாவது 1*650. அவர் கடைக்கு எடுத்து வந்த கராப்பின் நிறை 1*180. அதன் இன்றைய பெறுமதி 5000/= ஆகும். பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்ட KDM தோட்டின் இன்றைய பெறுமதி 4500g முடிய 1*650 – 9900/=. இதனடிப்படையிலேயே அவர் எடுத்து வந்த கராப்பின் பெறுமதியை 5000/= எனக் கேட்டோம்.

இதனால்தான் பற்றுச்சீட்டிற்கு உரிய பொருள் கண்டிப்பாக இது இருக்க முடியாது என்பதில் எமது நிறுவனம் மிகத்தெளிவாக இருக்கிறது.

எமது நிறுவனத்தில் இந்த ஆறு வருடத்திற்குள் எட்டுப்பேர் சேல்ஸ்மேன்களாக நின்று விலகியுள்ளனர். எமது நிறுவனத்தின் முதலாளியின் கட்டளை “வாடிக்கையாளர் எடுத்த பொருளின் லேபலில் (Label) உள்ள நிறையை வாடிக்கையாளரிடம் நிறுத்துக் காட்டாமல் பற்றுச்சீட்டில் பதியப்படக் கூடாது” என்பதாகும்.

அதனால் நிறையில் எந்தத் தவறும் வர சந்தர்ப்பமிருக்காது. ஆகையால், திட்டமாகச் சொல்கிறோம் பற்றுச்சீட்டுதான் மாறுபட்டிருக்கும். நிச்சயமாக, சத்தியமாகச் சொல்கின்றோம் இந்தப் பொருளுக்கும் பில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பற்றுச்சீட்டு காணாமல் போய் பின் தேடி எடுக்கப்பட்டதாக சகோதரர் முனாஸ் அவரே குறித்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பற்றுச்சீட்டு மாறுபட்டிருக்க அதிக வாய்ப்புண்டு என்பதனை உணரமுடியும்.

ஆகவே மேலே நாம் சொல்லும் காரணிகளை வைத்து பார்க்கும் போது பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளுக்கும் கொண்டுவந்த பொருளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது அப்பட்டமாக புலனாகிறது.

மேலும் குறித்த மே 17 தினத்தன்றே பிரிதொரு நபரிடம் அதே பொருளைக்கொடுத்து நாங்கள் முன்மொழிந்த 5000/= ஆவது தாருங்கள் என சகோதரர் முனாஸ் கேட்டு அனுப்பியிருந்ததுவும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எமது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளைப் பரப்பிய மேற்படி முனாஸ் என்பவருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 22-05-2018 அன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளோம்.

தொடர்பான செய்தி: கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்