ராஜிநாமா செய்கிறார் நவவி; வெற்றிடத்தை நிரப்பப் போவது யார்? றிசாட் கையில் இறுதி முடிவு

🕔 May 22, 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் –

க்கிய தேசியக் கட்சி ஊடாக – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எச்.எம்.எம். நவவி இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.

கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் மாறு செய்யாமல் கொடுத்த வாக்குறுதியை நவவி காப்பாற்றுகின்றார்.

நவவியின் வெற்றிடத்துக்கு அம்பாறை மாவட்டம் சம்மாந்துரையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், அல்லது சாய்ந்தமருதைச் சேர்ந்த, அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்ட ஏ.எம் ஜெமீல் நியமிக்கப்படலாம் என பரவலாகப் பேசப்படுகிறது.

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். கணிசமான வாக்குகளைப் பெற்றார். ஆனாலும் அந்த வாக்குகள் எல்லாமே இஸ்மாயிலுக்காக கிடைத்த வாக்குகள் கிடையாது.

சம்மாந்துறை தொகுதி சார்பாக மு.காங்கிரஸ் நிறுத்திய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் மீது கொண்ட அதிருப்தியினால், இஸ்மாயிலுக்கு கிடைத்த வாக்குகள் அவற்றில் கணிசமானவையாகும்.

இன்னொருபுறம், இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், அவர் எவ்வளவு மணி நேரத்துக்கு மக்கள் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பார் என்றொரு கேள்வி இப்போது பலராலும் எழுப்பப்படுகின்றது.

இஸ்மாயில் அடிப்படையில் சுதந்திரக் கட்சி சார்பானவர். அமைச்சர் ரிஷாதுடன் வைத்திருக்கும் விசுவாசத்தை விடவும் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்கா, ஹிஸ்புல்லாஹ் போன்றோருடன் அதிக ஈடுபாடும் நெருக்கமும் இஸ்மாயிலுக்கு உண்டு.

ஆக, சில மணி நேரம் மாத்திரமே இஸ்மாயில் – மக்கள் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கப் போகின்றார். அடுத்த நொடி சுதந்திரக் கட்சித்கு – அவர் தாவக் கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. இந்த நிலைமையானது கட்சிக்கு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவை ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தும்.

இஸ்மாயிலின் நண்பரான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தற்போது மஹிந்த அணியில் இணையும் முஸ்தீபுகளில் இறங்கியுள்ளார். எனவே, மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியலானது சம்பந்தமே இல்லாமல் மஹிந்த அணியிடம் போவதற்கான சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. இப்படி நடந்தால், மக்கள் காங்கிரஸ் மீதும் அந்தக் கட்சியின் தலைமை மீதும் ஐ.தே.க. கடும் அதிருப்தி கொள்ள வழிவகுக்கும்.

ஆக, இஸ்மாயிலுக்கு எம்.பி. வழங்கி, மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற எண்ணிக்கையை 03 ஆக குறைப்பதா? அல்லது ஜெமீலுக்கு வழங்கி அதனூடாக சாய்ந்தமருதுக்கு தனி நகர சபையை பெற்றுக் கொடுத்து, மு.கா.வுடன் அதிருப்தியில் இருக்கும் மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய ஊர்களை உள்வாங்கி அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளித்து, அடுத்த பொதுத் தேர்தலில் ஜெமீலும் வென்று மேலதிகமாக தேசியப்பட்டியலையும் பெற்று முகாவை விஞ்சுவதா? என்கிற கேள்விகளுக்குரிய விடைகளை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுத்தீன் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்