தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது

🕔 May 19, 2018

தென்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக  05 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

மேற்படி சுவாச நோயானது பிரதானமாக இன்புளுவன்ஸா (Influenza) எனும் வைரசினால் உருவாக்கும் நிமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையைத் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவ்வறிக்கையில் டொக்டர் ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையிலும் மாத்தறை பொது வைத்தியசாலையிலும் அதிகளவான சடுதியான சுவாச நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது ஒரு வயதுக்கு குறைந்த சிசு மரணங்கள் இந்த சுவாச நோயினால் ஏற்பட்டதாக அறியக்கிடைத்தது.

இது குறித்து டொக்டர் ஜயசிங்க மேலும் கூறுகையில்;

“நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சடுதியான காய்ச்சல் மற்றும் சுவாச அறிகுறிகளுடன் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களிலுள்ள சிறு பிள்ளை விடுதிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆய்வுகூட அறிக்கைகளின் படி இது இன்புளுவன்ஸா வைரஸினால் பரவும் நிமோனியா காய்ச்சல் என கண்டறிய பட்டுள்ளது. கடந்த சில வருடங்களிலும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற இன்புளுவென்ஸ நோய் அவதானிக்கப்பட்டது.

இந்நோய் பரவுவதைத் தடுக்க பொதுமக்கள் பின்வரும் சுகாதார பழக்க வழக்கங்களை கையாளுமாறு ஆலோசனை வழங்க படுகிறார்கள். இது சுவாசத்தினால் பரவும் நோய் என்பதால் காய்ச்சல் உள்ளவர்கள் பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடக்கூடிய முகமூடிகளை பாவிக்குமாறும், காய்ச்சலோடு இருமல் மற்றும் தடுமல் உள்ளவர்கள் கைக்குட்டையை பாவிக்குமாறும் வலியுறுத்த படுகிறார்கள்.

காய்ச்சலின்போது அடிக்கடி கைகளை சோப் கொண்டு கழுவுமாறும், முகத்தை அடிக்கடி தொடுவதை தவிர்க்குமாறும் வேண்டப்படுகிறார்கள்.

அதிக சன நெரிசல் உள்ள இடங்களை குறிப்பாக காய்ச்சல் உள்ள நிலையில் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்நோய்க்கு இரண்டு வயதுக்குட்பட்ட சிறுபிள்ளைகள், கர்ப்பிணி தாய்மார், பாலுட்டும் தாய்மார், சுவாச, இருதய, சிறுநீரக நோயுள்ளவர்கள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப் படலாம். இவர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

காய்ச்சல் போன்ற நோய் நிலைமை ஏற்படும் போது உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளவும்” என தெரிவித்துள்ளார்.

குறிப்பு:

இதற்கிடையில் இந்நோய் இலங்கை கடல் இறால்களை உட்கொள்வதினால் ஏட்படுவதாக எந்த வித அடிப்படையுமற்ற தவறான செய்தியொன்று, நேற்று முதல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்