அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை; பிரதேச சபை அசமந்தம்

🕔 May 18, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் சில மாட்டிறைச்சிக் கடைகளில், ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய இறைச்சி, 900 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கும், பிரதேச சபை தவிசாளருக்கும்  இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றினை அடுத்து, ஒரு கிலோ மாட்டிறைச்சிறை 800 ரூபாய்க்கு விற்பதென இணக்கம் காணப்பட்டது.

அதற்கு முன்னர் ஒரு கிலோ இறைச்சி 900 ரூபாவுக்கு விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பிரதேச சபையுடன் உடன்பாடு கண்ட பின்னரும், சில இறைச்சிக் கடைகளில் 900 ரூபாவுக்கே ஒரு கிலோ இறைச்சி விற்கப்படுகிறது.

இது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருடன் ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு கேட்டபோது;  “அனைத்து மாட்டிறைச்சிக் கடைகளிலும் ஒரு கிலோ இறைச்சி 800 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டுமென உடன்பாடு காணப்பட்டது. இதனையடுத்து 800 ரூபாவுக்கே இறைச்சி விற்கப்படுகிறது. அதற்கு அதிகமான விலைக்கு இறைச்சி விற்கப்படுவதாக இதுவரை யாரும் எம்மிடம் முறையிடவில்லை. அதேவேளை, இறைச்சிக் கடை உரிமையாளர்கள் பிரதேச சபையுடன் செய்து கொண்ட உடன்படிக்கையினை மீறி, அதிக விலைக்கு இறைச்சியை விற்பனை செய்வதாயின், முதலில் அது குறித்து எமக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்” என்றார்.

பிரதேச சபையினர் இறைச்சிக் கடைக்காரர்களுடன் விலை குறைப்பு உடன்படிக்கையினை மட்டும் செய்து விட்டு, தங்களின் மற்றைய வேலைகளைக் கவனித்துக் கொண்டிருப்பதில் பலன்கள் எவையுமில்லை.

தம்முடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் ,இறைச்சிக்கடை உரிமையாளர்கள் செயற்படுகின்றார்களா எனவும் கண்காணிக்க வேண்டும்.

இன்னொருபுறம், சில இறைச்சிக் கடைகளில் 800 ரூபாவுக்கு, எடை குறைத்து இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

Comments