கலப்பட நகையை விற்பனை செய்து விட்டு, பல்டியடித்த கல்முனை கடைக்காரர்: பாதிக்கப்பட்டவரின் கசப்பான அனுபவம்

🕔 May 17, 2018

– அஹமட் –

ல்முனையிலுள்ள நகைக் கடையொன்றில் பொதுமகன் ஒருவர் கொள்வனவு செய்த நகை, கருமை நிறமாக மாறியமையினை அடுத்து, அதனை குறித்த கடைக்கு கொண்டு சென்ற கொள்வனவாளரிடம், அந்த நகையினை தாங்கள் விற்பனை செய்யவில்லை என்று கடைக்காரர்கள் பல்டியடித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நகையினை கொள்வனவு செய்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த என்.எம். முனாஸ், ‘புதிது’ செய்தித்தளத்திடம் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினை விபரித்தார்.

“கல்முனையிலுள்ள சிலோன் ஜுவல் ஹவுஸ் எனும் கடையில், காதணி ஒரு சோடியினை 2012ஆம் ஆண்டு கொள்வனவு செய்தேன். அப்போது அதற்கு 11,500 ரூபாயினைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நகையினை பாவித்து வரும் போது, காலப்போக்கில் கருமை நிறமடைந்தது. எனவே, அதை கொள்வனவு செய்த கடைக்கு எடுத்துச் செல்ல நினைத்தபோது, கடைக்காரர்கள் வழங்கிய பற்றுச் சீட்டை எங்கே வைத்தேன் என்று மறந்து விட்டது.

இந்த நிலையில், அண்மையில் தற்செயலாக அந்தப் பற்றுச் சீட்டு கைக்குக் கிடைத்தது.

இந்த நிலையில் குறித்த நகையினையும் பற்றுச் சீட்டையும் எடுத்துக் கொண்டு, உரிய கடைக்குச் சென்றேன். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட காதணியை 05 ஆயிரம் ரூபாய்க்கு தங்களுக்கு விற்பனை செய்யுமாறு கேட்டார்கள். அதன்போது, ‘குறித்த நகையினை உங்கள் கடையில்தான் கொள்வனவு செய்தேன், இதோ பற்றுச்சீட்டு இருக்கிறது’ என்றுகூறி காண்பித்தேன்.

இருந்தபோதும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பற்றுச்சீட்டு எங்களுடையதுதான்; ஆனால், இந்த நகையை நாங்கள் விற்கவில்லை என்றார்கள். அப்படி அவர்கள் கூறியபோது நான் அதிர்ந்து விட்டேன். குறித்த நகையை நான்தான் அங்கு கொள்வனவு செய்தேன். ஆனால், கலப்படம் செய்யப்பட்ட நகையை அவர்கள் விற்பனை செய்து விட்டு, பாதிக்கப்பட்ட நான் பொய் சொல்வதாக கூறிவிட்டார்கள்.

இது குறித்து அவர்களுக்கு நான் விளக்கமளிக்க முற்பட்டபோது, அவர்கள் என்னிடம் சண்டித்தனம் காட்டினார்.

இதனையடுத்து, குறித்த நகையை அங்கேயே வைத்து விட்டு; “இந்த விவகாரத்தை மறுமையில் இறைவனின் சந்நிதியில் பார்த்துக் கொள்வோம்” எனக் கூறி விட்டு, நான் வந்து விட்டேன். பிறகு, அங்கிருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவர் அந்த நகையை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார்.

இதுபோன்ற மோசடி வியாபாரிகளை மக்கள் இனங்காண வேண்டும். மேலும், உரிய அதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்” என்று பாதிக்கப்பட்ட நபர் வருத்தத்துடன் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்