மேயரின் மலசலகூடத்துக்கு 57 லட்சம் ஒதுக்கப்பட்ட விவகாரம்; விளக்கம் சொன்னார் ரோசி சேனநாயக்க

🕔 May 17, 2018

கொழும்பு மாநகரசபை மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடம் 04 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், அதைச் சீரமைப்பதற்காகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறித்து, ஜே.வி.பி.யின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே, மேற்படி தகவலை ரோசி கூறியுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் அமர்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அப்போது மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீடு குறித்து ஜே.வி.பியின் மாநகர சபை உறுப்பினர் சுமித் பாசப்பெரும விமர்சனம் வெளியிட்டார்.

“மேயர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க இந்தளவு பெரிய தொகையைப் பயன்படுத்துகின்றார். ஆனால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொது மலசல கூடங்கள் திருத்தப்படவில்லை. அதைக் கவனத்தில் எடுக்காதது வருந்தத்தக்க விடயம்” என்று, சுமித் பாசப்பெரும கூறினார்

இதற்குப் பதிலளித்த மேயர் ரோசி சேனநாயக்க; “இந்த மலசலகூடம் 04 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை. அதைச் சீரமைக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொது மலசல கூடங்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்