அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியின் கல்விவிசாரா ஊழியர்கள், நோன்பு விடுமுறையை மோசடியாக அனுபவிக்க முயற்சி

🕔 May 17, 2018

ட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள், நோன்பு கால விடுமுறையில் உரியபடி கடமைக்கு வராமல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளது.

நோன்பு விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் 15ஆம் திகதியிலிருந்து எதிர்வருகின்ற அடுத்த மாதம் 18ஆம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளது.

இவ்விடுமுறை கல்விசார் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கல்வி சாரா ஊழியர்கள் இச்சலுகையினை அனுபவிப்பதற்கு ஏற்புடையவர் அல்ல. எனினும் அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலுள்ள கல்விசாரா ஊழியர்கள் கல்விசார் ஊழியர்களைப் போன்று, நோன்பு விடுமுறையை அனுபவிப்பதற்கான மோசடி நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாக மேற்படி முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக  அதிபரின் துணையுடன் கைவிரல் அடையாள இயந்திரத்தை பயன்படுத்தமாலிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாவது;

அட்டாளைச்சேனையில் மத்திய மகா வித்தியாலயத்தில் 35 கல்விசாரா ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்கள் காலை 07 மணி தொடக்கம் பிற்பகல் 3.45 மணிவரையில் கடமையாற்ற வேண்டும் என கல்வியமைச்சு சுற்று நிரூபம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.

பாடசாலை விடுமுறைக்காக மூடப்படும் காலங்களிலும் இவர்கள் அவ்வாறே கடமையாற்ற வேண்டும். எனினும் குறித்த பாடசாலையில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்கள் அங்குள்ள ஓர் உயர் நிர்வாகியின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மட்டும் பாடசாலைக்கு வருகை தருகின்றனர். இதன்போது செய்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் இடவேண்டிய கையொப்பத்தை இட்டு முழு நாட்களும் பாடசாலைக்கு வருகை தந்தவர்கள் என காட்டி விடுமுறைக் காலத்துக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதி அதிபர், மேற்படி கல்விசாரா ஊழியர்களை கல்வியமைச்சின் சுற்று நிரூபத்திற்கமைவாக கடமையாற்ற வேண்டும் எனப் பணித்துள்ளார்.

ஆயினும் பாடசாலையின் அதிபர் இவர்களிடமிருந்து ஏதோ வகையான கையூட்டல்களைப் பெற்று, பிரதி அதிபரின் பணிப்புரையை உதாசீனப்படுத்துமாறு குறிப்பிட்ட கல்விசாரா ஊழியர்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்.

மேலும் அரசினால் தற்போது பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் கைவிரல் அடையாள இயந்திரத்தை குறிப்பிட்ட விடுமுறை காலத்தில் பயன்படுத்த தேவையில்லை எனவும் இவ்வதிபர் பிணிப்புரை விடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நாட்களில் குறிப்பிட்ட கல்விசாரா ஊழியர்கள் வெளிச் செல்வதனை இயந்திரத்தில் பதிவிடாமல் செல்வதற்கும் அனுமதித்துள்ளார்.

ஆகவே, இவ்விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குறிப்பு: இந்த முறைப்பாடு தொடர்பாக, அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் அல்லது பொறுப்புவாய்ந்த ஆசிரியரால் பதில் அனுப்பப்படுமாயின், அதனை வெளியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்

Comments