மரணத்தைத் தடுப்பதற்காக, அதிசய பக்ரீரியாவை தனக்குள் செலுத்திக் கொண்ட ரஷ்ய விஞ்ஞானி; நடந்தது என்ன?

🕔 May 16, 2018

“உங்க வயசு என்ன சார்?”

“எனக்குப் போனவாரத்தோட 500 முடிஞ்சி 501 நடக்குது!!”

இது கற்பனைதான் என்றாலும், இவ்வளவு ஆண்டுகள் மனிதனால் உயிர்வாழ்வது எக்காலத்திலும் சாத்தியமே அல்ல என்று யாராலும் சொல்ல முடியாது.சாகாவரம் பெற்ற மனிதர்களை நாம் ஃபேன்டசி கதைகளில் மட்டும்தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த கற்பனையை நிஜமாக்க எல்லா காலத்திலும் மனிதர்கள் முயற்சி செய்து வந்துள்ளனர் என்பதே உண்மை. மனிதனை நீண்ட நாள்கள் வாழ வைக்கும் அந்த ‘ரகசியத்தைப்’ பற்றிய தேடல் இன்றும் தொடர்கிறது.

இந்நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ் (Dr. Anatoli Brouchkov) என்பவர் அந்த ரகசியத்தின் விடை 3.5 மில்லியன் ஆண்டு பழைய பாக்டீரியாவில் இருப்பதாக நினைத்தார். அப்படி நினைத்தவர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா? ஆம், தனது உடலில் அந்த 3.5 மில்லியன் ஆண்டு பழைய பக்டீரியாவை செலுத்திக்கொண்டார்.

சாகாவரம் பெற்ற பாக்டீரியா:

பேசில்லஸ் எஃப் (Bacillus F) என்று பெயரிடப்பட்ட இந்தப் பழங்காலத்து  பக்டீரியா 2009ஆம் ஆண்டு விஞ்ஞானி அனடோலி ப்ரௌகோவ்-ஆல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சைபீரியாவின் நிரந்தரமான உறைந்த பனிக்கட்டிகள் காணப்படும் யாகூட்ஸ்க் (Yakutsk) பிரதேசத்தின் அடியாழத்தில் இந்தப் பக்டீரியாவை அவர் கண்டறிந்தார். 3.5 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்று கணக்கிடப்பட்ட இந்த பக்டீரியாவில் அவர் பார்த்த ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவென்றால் அவை அப்போதும் உயிருடன் காணப்பட்டதேயாகும்.

இந்த வகை பக்டீரியா நீண்ட நாள்கள் உயிருடன் வாழ்வது மட்டுமல்லாமல் அதைச் சுற்றி இருந்த அனைத்து உயிரிகளின் வாழ்நாள்களை நீடிப்பதிலும் முக்கிய பங்காற்றியது பின்பு கண்டறியப்பட்டது.

எலிகள், பழ ஈக்கள் (fruit flies) மற்றும் சில தாவர வகைகளின் மீது அந்தப் பக்டீரியாவினைச் செலுத்தி நடத்தப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வுகள் நம்பத்தகுந்த முடிவுகளைத் தந்தது. அதிலிருந்து இதைப்பற்றிய கவனம் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆரம்பகட்ட ஆராய்ச்சியை மேற்கொண்ட விக்டர் செர்னியாவ்ஸ்கி (Dr.Viktor Chernyavsky) என்ற ரஷ்யாவைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர் (epidemiologist), அந்த பக்டீரியாவை ‘உயிரின் அமுதம்’ (elixir of life) என்று அழைத்தார்.

அந்த ஆய்வுகளின்போது, எலிகள் நீண்ட நாள்கள் வாழ்ந்ததையும்,  அவற்றின் வயதான காலத்திலும் இனப்பெருக்கம் செய்யும் திறனுடனும் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதேபோல இந்தப் பக்டீரியா செலுத்தப்பட்ட தாவரங்கள் மிக வேகமாக வளருவதும், வேகமாக பனியில் உறைந்து போவதைத் தடுக்கும் வகையில் இருந்ததும் கண்டறியப்பட்டது. பொதுவாக யகூட்யா பிரதேசத்தில் வாழும் மக்கள் மற்ற பகுதியில் வாழும் மக்களைவிட அதிகநாள்கள் வாழ்வதற்கு இந்தப் பக்டீரியா அவர்களின் குடிநீருடன் கலந்து காணப்படுவதே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது.

மில்லியன் டாலர் கேள்வி

இந்த பேசில்லஸ் எஃப் (Bacillus F) பக்டீரியாவானது நீண்ட நாள்கள் வாழும் தகவமைப்பைக் கொண்டது என்று தெளிவாகப் புரிந்துகொண்டாலும் அவற்றின் உடலமைப்பில் துல்லியமாக எந்த அம்சம் இதற்குக் காரணமாக உள்ளது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதுவரை டொக்டர் ப்ரௌகோவ் மற்றும் அவரது குழுவினர் அந்த பக்டீரியாவின் டி.என்.ஏ வரிசையை (DNA Sequence)  மட்டுமே கண்டறிந்துள்ளனர், ஆனால், அவற்றுள் இந்த அதிசயத்தை நிகழ்த்தும் ஜீன்கள் (genes) எவை என்பது இன்னும் கண்டறியப்படாத மில்லியன் டாலர் கேள்வியாகும்.

இதைப் பற்றி டொக்டர் ப்ரௌகோவ் கூறுகையில்; “கேன்சரை உருவாக்கும் ஜீன்களை துல்லியமாகக் கண்டறிவது எவ்வளவு சிக்கலான காரியமோ அதேபோலத்தான் இந்தப் பக்டீரியாவின் அந்தக் குறிப்பிட்ட சூட்சும ஜீன்களைக் கண்டறிவதும்” என்கிறார்.

இந்தப் பக்டீரிவை மனிதர்களில் முறையாக சோதித்துப் பார்த்தது கிடையாது. மற்றும் இது மனிதர்களில் எந்த வகையில் செயல்படும் என்பதும் யாருக்கும் தெரியாது. அந்தச் சமயத்தில்தான் டொக்டர் ப்ரௌகோவ்வின் மனதில் ஒரு விபரீத யோசனை தோன்றியது. அதுதான் அந்த பக்டீரியாவை தனக்குள் செலுத்திப் பார்க்கும் யோசனை.

வாழ்வா? சாவா?

அதன்படியே அவர் தனது உடலில் அந்த பக்டீரியாவை செலுத்திக்கொண்டு மனிதனில் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை சோதித்தார்.

முடிவு..?

அவர் என்றைக்கு இறக்கிறாரோ அன்று தானே முடிவு கிடைக்கும்.

ஆனால், 2015-இல் அந்தப் பக்டீரியாவை உடலில் செலுத்தியதிலிருந்து இன்றுவரை அவர் உயிரோடுதான் இருக்கிறார். அந்தப் பாக்டீரியா செலுத்தப்பட்டதன் பின்பு இரண்டு வருடங்களில் முன்பிருந்ததைவிட நன்றாக இருப்பதாக சொல்லும் அவர், தனக்கு காய்ச்சல், சளி மற்றும் இன்னபிற உபாதைகள் வரவே இல்லை என்றும் கூறுகிறார். மேலும் அவரின் மருத்துவ அறிக்கைகளும் அவர் முன்பிருந்ததைவிட நல்ல ஆற்றலோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்த முடிவுகள் எதார்த்தமாகக்கூட கிடைத்திருக்கலாம் என்றும் இதை உறுதி செய்வதற்கு நீண்ட ஆய்வானது தேவை எனவும் மற்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எது எப்படியோ நீண்ட நாள்கள் மனிதனை நோயின்றி இளமையுடன் வாழவைப்பது சாத்தியம் என்பது நிரூபிக்கப்படுமானால், அது உண்மையாகவே அறிவியலின் அளப்பரிய கண்டுபிடிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்