முஸ்லிம்கள் மீதான கலவரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர், அம்பாறை நகர சபையின் பிரதி தவிசாளரானார்

🕔 May 13, 2018

ம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள துலீப் குமாநாயக்க என்பவர், அம்பாறை நகர சபையின் பிரதித் தவிசாளராகத் தெரிவாகியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ சார்பான – தாமரை மொட்டு சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில்  போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம், இவர் இந்தப் பதவிக்கு வந்துள்ளார்.

விளக்க மறியலில் இருக்கும்போதே, அம்பாறை நகர சபையின் பிரதித் தவிசாளராக இவர் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

அம்பாறை நகரில் நடைபெற்ற கலவரத்துடன் தொடர்புபட்டார் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட  இவர், சில மாதங்களாக ICCPR சட்டத்தின் கீழ் – விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.

அம்பாறை  நகர் – காசிம் ஹோட்டல் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் ஏனைய சந்தேக நபர்களுடன் சேர்த்து இவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

இருந்தபோதும் ஏனைய வழங்குகளில் இவருக்கு பிணை வழங்கப்படாமையினால், இவர் தற்போதும் விளக்க மறியலிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறையில் நடந்த கலவரம் தொடர்பான ஏனைய 05 வழக்குகளிலும் இவர் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இதில் அம்பாறை பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கும் அடங்கும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்படி துலீப் குமாநாயக்க இருக்கும் கட் அவுட்டை அம்பாறை நகர சுற்று வட்டத்திற்கருகே காணலாம்.

தகவல் மூலம்: சிராஜ் மஷுர் (உறுப்பினர் – அக்கரைப்பற்று மாநகரசபை)

Comments