தெ.கி.பல்கலைக்கழகத்தினுள் நுழைய ஊடகவியலாளர்களுக்குத் தடை; அநாகரீகமாக நடந்து கொண்ட காவலாளிகள் தொடர்பில் விசனம்

🕔 May 13, 2018

– முன்ஸிப் அஹமட் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்களை, பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அநாகரீமான முறையில் வழிமறித்த காவலாளர்கள், உள்ளே நுழைய விடாமல் திருப்பியனுப்பிய சம்பவமொன்று இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது, காவலாளிகளின் அநாகரீக செயற்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் தமது விசனத்தை அங்கு வெளியிட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் – இன்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழகத்தில் நடத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, ஊடகவியலாளர்களை அழைத்திருந்தனர். குறித்த சங்கத்தின் தலைவர் எம். அப்துல் ஜப்பார் கையெழுத்திட்ட அழைப்பிதழ் – ஊடகவியலாளர்களுக்கு இதன்பொருட்டு கிடைக்கச் செய்யப்பட்டிருந்தன.

இதற்கிணங்க, குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் அங்கு ஊடகவியலாளர்கள் சென்றனர். இதன்போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் ஊடகவியலாளர்களை பல்கலைக்கழகத்தின் காவலாளிகள் அநாகரீகமான முறையில் வழிமறித்து, உள்ளே செல்ல விடாது தடுத்தனர்.

“குறித்த ஊடக சந்திப்புக்கான அனுமதி பெறப்படவில்லை என்றும், அதன் காரணமாக அந்த நிகழ்வினை நடத்த அனுமதிக்க வேண்டாம் என்று பதிவாளருக்கு உபவேந்தர் அறிவுறுத்தியுள்ளார்” என அங்கிருந்த காவலாளிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, “பல்கலைக்கழக வளாகத்தினுள் குறித்த ஊடக சந்திப்பு நடைபெறுகின்றமை, உபவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைவாக தடைசெய்யப்பட்டுள்ளது” என தெரியப்படுத்தும் அறிவித்தலொன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கையொப்பமிட்டிருந்தார்.

ஆயினும், தாம் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பை தடைசெய்தமையானது, உபவேந்தரின் சர்வதிகார நடவடிக்கையாகும் என, தென்கிழக்கு பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.

பல்கலைக்கழகத்தினுள் இது போன்ற ஊடக சந்திப்புக்களை நடத்தும் போது, அது தொடர்பாக நிருவாகத்துக்கு எழுத்து மூல அறிவிப்பொன்றினை தாம் வழங்குவதாகவும், அவ்வாறே, இன்றைய ஊடக சந்திப்பு தொடர்பாகவும் பதிவாளருக்கு தாம் அறிவித்திருந்ததாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கூறினர்.

கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதியும் பல்கலைக்கழகத்தினுள் ஓர் ஊடக சந்திப்பினை தாம் நடத்தியதாகவும், அதன்போதும் அதுபற்றி நிருவாகத்துக்கு தாம் , தற்போதைய ஊடக சந்திப்பு குறித்து தெரியப்படுத்தியமை போலவே எழுத்து மூலம் அறிவித்ததாகவும் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஆக, அப்போது எமது எழுத்து மூல அறிவிப்பை ஏற்று எமது ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்துவதற்கு அனுமதித்த உபவேந்தர், இன்றைய சந்திப்பினை நடத்த விடாமல் தடுப்பது ஏன் எனவும் பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்தினர் கேள்வியெழுப்பினர்.

எவ்வாறாயினும், பல்கலைக்கழகத்தினுள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஊடக சந்திப்பு, ஒலுவில் கிறீன் வில்லாவில் இடம்பெற்றது.

இந்த ஊடக சந்திப்பில், தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்