ஜனாதிபதியிடம் நான் மன்னிப்புக் கோரவில்லை; அரசியல்வாதிகள் எவருக்கும் தலை வணங்கப் போவதுமில்லை: சரத் பொன்சேகா தெரிவிப்பு

🕔 May 12, 2018

னாதிபதியிடம் – தான் மன்னிப்புக் கோரியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

எந்தவொரு அரசியல்வாதியிடமும் மன்னிப்புக் கோரப்போவதுமில்லை, அவர்களுக்கு தலை வணங்கப் போவதுமில்லை என்று, நேற்று வெள்ளிக்கிழமை அவர் தெரிவித்தார்.

ஹொரவபொத்தானை சென்றிருந்த அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயங்களைக் கூறினார்.

“சரத் பொன்சேகா எனும் நபர் பெற்றோர்களையும், மதத்தலைவர்களையுமே தனது வாழ்நாளில் வணங்கியுள்ளார்.

நான் எந்த அரசியல்வாதியையும் வணங்கியதுமில்லை, வணங்கப் போவதுமில்லை.

ராஜபக்ஷ என்னை சிலையிலடைத்த போது, நான் மன்னிப்புக் கோரினால் என்னை விடுவிப்பதாகக் கூறினர். ஆனால் நான் அவர்களுக்குத் தலை வணங்கவோ, கீழ்படியவோ இல்லை.

நான் அரசியல்வாதிகளை இப்போதும் வணங்கவோ, அவர்களிடம் மன்னிப்புக் கோரவோ போவதில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படாமை தொடர்பில் சில கருத்துக்களை நான் வெளியிட்டேன். அரசியல் ரீதியாக அதனை சிலர் விமர்சித்தனர்.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நான் மன்னிப்புக் கோரியதாக பொய்யான தகவல்கள் வெளியாகின. ஜனாதிபதியை நாங்கள் 03 நிமிடங்கள்தான் சந்தித்தோம்” என, அவர் மேலும் கூறினார்.

Comments