ஜனாதிபதியைச் சந்திக்க முடியாமல், மூன்று மாதம் சந்திரிக்கா அலைந்த கதை: அம்பலப்படுத்தினார் சரத் பொன்சேகா

🕔 May 6, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மூன்று மாதங்களாக முயற்சித்தும் முடியாமல் போன தகவலொன்றினை அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த 02 மாதங்களாக தொலைபேசி ஊடாகவாயினும் ஜனாதிபதியைத் தொடர்பு கொள்வதற்கு சந்திரிக்கா முயன்றதாகவும், அதுகூட  முடியவில்லை என்றும் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

இந்த தகவல்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கண்ணீர் மல்க தன்னிடம் கூறியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தனது அமைச்சில் அமைச்சில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு விடயங்களை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளூராட்சி தேர்தல் தோல்வியை அடுத்து> கூட்டரசாங்கம் கொந்தளிப்பான காலகட்டத்தை கடந்து வந்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் தோல்வியின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தை முதலில் தெரிவித்தவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே.

அதன் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதியுடன் மிக நெருக்கமானவர்கள். பிரதமரை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருந்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை எனக்கு வழங்க வேண்டுமென ஐ.தே.கட்சி பிரேரித்தது.

நான் இந்தோனேசியாவுக்கு போவதற்கு முன்பு, எனக்கு அதிகாரமிக்க ஓர் அமைச்சுப் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

நான் இந்தோனேசியாவில் இருக்கும் போது எனக்கு முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவிருப்பதால் உடனே நாடு திரும்புமாறு ஜனாதிபதியின் நாடாளுமன்றச் செயலாளரும், அமைச்சர் ராஜிதவும் எனக்குத் தொலைபேசியில் தெரிவித்தார்கள். ஆனால், நான் உடன் திரும்பி வரவில்லை.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி பிரதமர் கையில் இருப்பதாக நான் இணையத்தளங்கள் மூலமாக அறிந்தேன்.

இலங்கை திரும்பியதும் அவ்வமைச்சை எனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.

பின்னர் நான் ஜனாதிபதியைச் சந்தித்து இது பற்றி வினாவிய போது, நான் ராணுவத்தில் பணிபுரிந்த காரணத்தினால் எனக்கு பொலிஸாருடன் பணி புரிய முடியாதென சில பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் தெரிவித்ததுடன் சில தேரர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என ஜனாதிபதி தெரிவித்தார். எனினும் பெயர்களைக் கூற மறுத்துவிட்டார்.

நான் ராணுவத்தில் பணி புரிந்த போது பொலிஸாருடன் இணைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றேன். தற்போதைய பொலிஸ் மா அதிபருடனும் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆகவே ஜனாதிபதியின் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் போது செய்யப்பட்ட அனைத்து குற்றங்களையும் மூடி மறைப்பதற்காகச் செய்யப்பட்ட ஏமாற்றம்தான் மத்திய வங்கி பிணைமுறி மோசடி பற்றிய செய்திகளாகும்.

ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வஞ்சனை, மோசடி பொதுச்சொத்தை வீணடித்தல் மற்றும் பெற்றுக்கொண்ட தரகுப் பணம் ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது பத்து பில்லியன் ரூபாக்களையும் தாண்டும்.

நல்லாட்சி அரசின் பின்னடைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இருவருமே பொறுப்பானவர்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்