ஓய்வு பெற்ற பிறகு அதிபராக நடித்தார்; ஹபாயாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவரின் தில்லாலங்கடி அம்பலம்

🕔 May 3, 2018

– முன்ஸிப் அஹமட் –

திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்திடைந்து ஓய்வு பெற்ற பிறகும், ‘அதிபராக’ கடமையாற்றி வந்துள்ளதோடு, பாடசாலையின் பதிவுப் புத்தகத்திலும் ‘அதிபர்’ என சட்டவிரோதமாகக் கையெழுத்திட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

சண்முகா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலனின் சேவைக் காலம் கடந்த ஏப்ரல் 02ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து அவர் ஓய்வுபெற்று வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையில்  தனது சேவைக்காலத்தை நீடிக்குமாறு கோரி, சுலோச்சனா ஜெயபாலன் மேலதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆயினும் அதற்கான அனுமதி அவருக்கு கிடைக்காத நிலையில் தொடர்ந்தும் அவர் அதிபராகக் கடமையாற்றி வந்துள்ளார். இதேவேளை, சண்முகா கல்லூரியில் அதிபர் சேவையிலுள்ள ஒருவர் கடமையில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, தான் சேவையில் இல்லாத நிலையிலேயே,  மாகாண கல்வித் திணைக்களத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, சண்முகா கல்லூரியின் அதிபர் என சுலோச்சனா ஜெயபாலன் கையெழுத்திட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சேவையிலும், அதிபர் பதிவியிலும் இல்லாத நிலையில்தான், அங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளை ஹபாயா அணிய வேண்டாம் என, சுலோச்சனா ஜெயபாலன் அச்சுறுத்தியுள்ளார்.

சண்முகா கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார், அங்கு அத்துமீறி நுழைந்து அதிபர் சுலோச்சனா ஜெயபாலனை அச்சுறுத்தியதாக, சில ஊடங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

ஆனால், சுலோச்சனா ஜெயபாலன்தான் சண்முகா கல்லூரியின் அதிபர் பதவியில் அத்துமீறி இருந்துள்ளதோடு, சட்டவிரோதமாகவும் அந்தப் பதவியை வகித்துள்ளார் என்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்