ஹபாயா சர்ச்சை; ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும்: எங்கே முஸ்லிம் அமைச்சர்கள்?

🕔 April 27, 2018

– வை எல் எஸ் ஹமீட் –

திருகோணமலை சண்முகா தேசியப் பாடசாலையின் ஒருநாள் ஆர்ப்பாட்டம், அங்கு கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியைகளுக்கு உடன் இடமாற்றத்தை வழங்க வைத்திருக்கிறது. அரச யந்திரம் அவ்வளவு வேகமாக செயற்பட்டிருக்கின்றது. குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை என்பதால் இடமாற்ற அதிகாரம் மத்திய கல்வி அமைச்சுக்குரியது. அவசரத் தேவைகளுக்காக மாகாண கல்விப் பணிப்பாளர் இடமாற்றத்தை வழங்க முடியும். ஆனால் அது மத்திய கல்வி அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கிடைக்கின்ற தகவல்களின்படி, மாகாண கல்விப் பணிப்பாளரின் உத்தரவுப்படியே தற்போது இடமாற்றம் வழங்கப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சு அதனை உறுதிப்படுத்த வேண்டும். மாகாண கல்விப்பணிப்பாளர் யாருடைய உத்தரவின்பேரில் அல்லது அழுத்தத்தின் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கின்றார் என்பது தெரியவில்லை.

ஏதோவொரு பலமான சக்தி இதன் பின்னால் செயற்பட்டிருக்கலாம் என்பது நிராகரிக்கக் கூடியதல்ல. அவ்வாறு ஒரு சக்தி செயற்பட்டிருந்தால் அதனை அடையாளம்காண முடியுமென்றால் இதன் பின்னால் உள்ள திட்டத்தின் ஆழ, அகலத்தை அளவிடுவது சற்று இலகுவாகலாம்.

இந்த இடமாற்றம் எந்த பாடசாலைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்ற தகவல் இதனை எழுதும்வரை அறிய முடியவில்லை. அது ஒரு முஸ்லிம் பாடசாலையாயின் குறித்த ஆசிரியைகள் ஆறுதலடைவார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினை முஸ்லிம் பாடசாலையா? இந்துப்பாடசாலையா? என்பதல்ல. என்ன காரணத்துக்காக இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் முக்கியமானது.

கண்ணியம்காக்க உடுத்த ஆடையை குற்றம் என்று கூறி, இடமாற்றம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று இது அனுமதிக்கப்பட்டால் நாளை ஒவ்வொரு பாடசாலையாக இது தொடரும். இன்று ஆசிரியைகளில் கைவைக்க அனுமதித்தால் நாளை அது மாணவிகளைத் தொடரும். அந்நிய மதப்பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துவரக் கூடாதென்பர். அதன்பின் நீளக்காற்சட்டை கூடாதென்பர்.

ஒன்றில் அரசு ஒரு கொள்கைத் தீர்மானமெடுக்கட்டும், “முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியர்களும், தமிழ் பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களும் மாத்திரமே கற்பிக்க வேண்டுமென்று. இது ஏற்படுத்தப்போகின்ற நடைமுறைப் பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வைக் கூறட்டும். அல்லது அவரவர் கலாச்சார ஆடைகள் அணிவதில் அடுத்தவர் மூக்கை நுழைக்கக்கூடாது என்று சுற்றுநிருபம் அனுப்பட்டும்.

ஆடை சுதந்திரம் தொடர்பாக ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட உத்தரவு முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். இதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டும்.

இது ஒரு பாடாசாலையில் நடந்த நிகழ்வு என எடுக்க வேண்டாம். இதை அனுமதித்தால் இது ஒரு தொடர் சங்கிலியாக மாறும். உரிமைக்காக போராடுவதாக தேர்தல் மேடைகளில் கூறினால் போதாது. எம் மார்க்கம் கூறிய ஒழுக்கமான ஆடை என்பது எமது பிரதான உரிமை. அதை விட்டுக்கொடுக்க முடியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்