அதாஉல்லா: கலைத்து விடப்பட்ட கோலம்

🕔 August 25, 2015

Article - 11
‘ந
டக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது, கிடைக்காதென்பார் கிடைத்து விடும்’ என்று, தாயைக் காத்த தனயன் திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. கவியரசர் கண்ணதாஸன் அந்தப் பாடலுக்குச் சொந்தக்காரர்.

ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள், எதிர்வு கூறல்கள், அனுமானங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல். நடக்கும் என்று நாம் எதிர்பார்த்த எத்தனையோ விடயங்கள் இந்தத் தேர்தலில் நடக்காமல் போய் விட்டன. நாடாளுமன்ற ஆசனங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் பலருக்கு – இம்முறை, அவை கிடைக்காமல் போயுள்ளன. இதுதான் அரசியல், இதுதான் வாழ்க்கை.

நாலு வரியில் இந்தத் தத்துவத்தை, பொட்டில் அடித்தாற் போல் சொல்லி வைத்த கண்ணதாஸனை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. நேற்றுவரை – படை, பட்டாளம், பாதுகாப்புக்களுடன் நம் மத்தியில் வலம் வந்த அரசியல் புள்ளிகளில் கணிசமானோர், தேர்தலுக்குப் பின்னர் – வீட்டை விட்டு வெளியேறுவதற்கே, வெட்கப்பட்டுக் கிடக்கிறார்கள்.

பல புதிய முகங்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளன. அதேவேளை, பழம் தின்று – கொட்டை போட்டதாகச் சொல்லும், பழைய அரசியல்வாதிகள் பலர், இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

பலித்த அனுமானங்கள்

இவ்வாறானதொரு நிலையில், கடந்த ஜுலை 21 ஆம் திகதியன்று ‘தமிழ் மிரர்‘ பத்திரிகையில் நாம் எழுதிய ‘கதிரைகளுக்கான போர்‘ என்கிற கட்டுரை அவதானத்துக்குரியது. அந்தக் கட்டுரையில், ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலின் சில முடிவுகளை அனுமானித்து எழுதியிருந்தோம். அவற்றில், அம்பாறை மாவட்ட அரசியல் களம் தொடர்பாக, நாம் எழுதியிருந்த மூன்று விடயங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

01) அம்பாறை மாவட்ட ஆசனப்பங்கீட்டில் ஐ.தே.கட்சியிடமிருந்து மு.காங்கிரஸ் 03 முஸ்லிம் வேட்பாளர்களைப் பெற்று, களமிறக்கியிருப்பதால், அந்த மூன்று உறுப்பினர்களையும் வென்றெடுக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

02) அம்பாறை மாவட்ட தேர்தல் களம், இம்முறை – முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு ‘வோட்டலூ’வாக அமைந்து விடும்.

03) அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் மயில் கட்சிக்கு, ஆசனங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள், பெரிதாகத் தெரியவில்லை.

மேற்படி அனுமானங்கள் மூன்றும் அப்படியே பலித்திருக்கின்றன என்பதுதான் இங்குள்ள சுவாரசியமான விடயமாகும். இந்த அனுமானங்கள் பூவா? தலையா? போட்டுப் பார்த்ததனூடாகப் பெற்றுக் கொண்டவையல்ல. வாக்காளர்களின் மன உணர்வுகளை கேட்டறிந்து, கள நிலைவரங்களை மதிப்பீடு செய்து அவற்றினூடாகப் பதிவு செய்தவையாகும்.

அதாஉல்லாவின் தோல்வி

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அரசியல் வாழ்க்கையில், இந்தப் பொதுத் தேர்தலானது மிக முக்கியமானதொன்றாகும். அதாஉல்லா – முஸ்லிம் காங்கிரசினூடாக அரசியலுக்குள் வந்தவர். மு.காங்கிரஸில், அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கு அடுத்ததாக, அதிகாரம் பொருந்திய பதவியாகக் காணப்படும் தவிசாளர் பதவியை அதாஉல்லா வகித்திருந்திருந்தார். ஆயினும், 2003 ஆம் ஆண்டு, மு.கா. தலைமையுடன் முரண்பட்ட நிலையில் கட்சியை விட்டு வெளியேறி, தேசிய காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் துவங்கி, அதன் தலைவரானார்.

அதாஉல்லா – மு.காங்கிரசை விட்டு வெளியேறி, தனிக்கட்சி ஆரம்பித்த பின்னர் நடைபெற்ற 2004, 2010 ஆம் ஆண்டுகளின் பொதுத் தேர்தல்களையெல்லாம், ஓர் அமைச்சராக இருந்துதான் எதிர்கொண்டார். மு.கா.வை விட்டுப் பிரிந்த பிறகு, அதிகாரமும், அமைச்சர் பதவியுமின்றி – அதாஉல்லா முகம் கொடுத்த முதலாவது தேர்தல் – நடந்து முடிந்த பொதுத் தேர்தலாகும். இந்தத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா படுதோல்லியடைந்தார்.

அது என்ன படுதோல்வி?

அதாஉல்லா, அவருடைய அரசியல் வாழ்வில் இதுவரை 05 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். ஆனாலும், அவர் முதன் முதலாக நாடாளுமன்றம் வந்தது, மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலமாகத்தான். அதாஉல்லா எதிர்கொண்ட 05 பொதுத் தேர்தல்களில் இரண்டு தேர்தல்களை மு.காங்கிரசின் வேட்பாளராகவும், 03 தேர்தல்களை ஐ.ம.சு.முன்னணியின் வேட்டபாளராகவும் சந்தித்திருக்கின்றார்.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்தான், அதாஉல்லா போட்டியிட்ட முதலாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். இதில், மு.காங்கிரசின் வேட்பாளராக, மக்கள் முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்ட அதாஉல்லா, 75,647 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். அந்தத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் மக்கள் முன்னணியில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரசினூடாக அதாஉல்லா களமிறங்கிய இரண்டாவது தேர்தல் 2001 ஆம் ஆண்டு நடந்தது. இந்தத் தேர்தலில் மு.காங்கிரசின் மரச் சின்னத்தில் அதாஉல்லா போட்டியிட்டார். இதன்போது, 35,523 விருப்பு வாக்குகள் அவருக்குக் கிடைத்தன. அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில், முதலாவது அதிகூடிய விருப்பு வாக்குகள் அதாஉல்லாவுக்கே கிடைத்தன.

இதன் பின்னர், மு.கா.விலிருந்து பிரிந்து சென்ற நிலையில் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதாஉல்லா போட்டியிட்டார். இதன்போது, 39,773 விருப்பு வாக்குகள் அவருக்குக் கிடைத்தன. அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிட்டவர்களில், மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று, அதாஉல்லா நாடாளுமன்றுக்குத் தெரிவானார்.

அதாஉல்லா சந்தித்த நான்காவது பொதுத் தேர்தல் 2010 ஆம் ஆண்டு நடந்தது. அந்தத் தேர்தலிலும், வெற்றிலைச் சின்னத்தில்தான் அவர் போட்டியிட்டார். 36,643 வாக்குகள் கிடைத்தன. அந்தக் கட்சியில் போட்டியிட்டவர்கள் பெற்ற, இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்காக, அது அமைந்தது. அதிலும் அதாஉல்லா வெற்றி பெற்றார்.

இப்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து – தான் சந்தித்த ஒவ்வொரு தேர்தலிலும் அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி வந்த அதாஉல்லா, இம்முறை எவ்விதமான அதிகாரமும் இல்லாததொரு நிலையில், வெற்றிலைச் சின்னம் சார்பாக பொதுத் தேர்தலை எதிர்கொண்டார். இதில், யாரும் எதிர்பாராத வகையில் வெறும் 16,771 விருப்பு வாக்குகளையே அவர் பெற்றுக் கொண்டார். அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.முன்னணிக்கு இம்முறை இரண்டு ஆசனங்கள்தான் கிடைத்தன. ஆனால், விருப்பு வாக்கின் அடிப்படையில் – ஐந்தாம் இடத்துக்கே அதாஉல்லாவால் வர முடிந்தது. அதனால், அவர் படுதோல்வியடைந்தார்.

அதாஉல்லா இந்தத் தேர்தலில் தோல்வியடைவார் என்று நாம் அனுமானித்திருந்தபோதும், இப்படியொரு மோசமான தோல்வியை அவர் முகம் கொள்வார் என நாம் நினைத்திருக்கவில்லை. சாதாரணமாக, ஒரு பிரதேச சபைத் தேர்தலில் பெறப்படும் அதிகூடிய விருப்பு வாக்குகளின் எண்ணிக்கைக்குச் சமனானதொரு தொகையினையே, அதாஉல்லா இந்தப் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்டார் என்பது, அவரின் அரசியல் எதிராளிகளுக்கே அதிர்ச்சியான செய்தியாக இருந்தது.

இப்படியொரு தோல்விக்கு என்னதான் காரணம்?

தோல்வியும் பின்னணிகளும்

முதலில், இந்தத் தேர்தலிலே – வெற்றிலைச் சின்னத்தில் அதாஉல்லா போட்டியிட்டிருக்கக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் புரிந்த கொடுமைகளால், மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தினை முஸ்லிம் மக்கள் மிக மோசமாக வெறுக்கத் தொடங்கினர். அந்த வெறுப்பின் பிரதிபலிப்பினை இறுதியாக நடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் முதன் முறையாக நமக்குக் காணக் கிடைத்தது.

இவ்வாறானதொரு நிலையில், வெற்றிலைச் சின்னத்தில் அதாஉல்லா போட்டியிட்டமையானது, இந்தத் தேர்தல் தொடர்பில் – அவர் எடுத்த பிழையான முடிவுகளில் பிரதானமானதாகும்.

நடந்து முடிந்த தேர்தலில் அதாஉல்லா, அவருடைய சொந்தக் கட்சியான தேசிய காங்கிரசின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால், சிலவேளை – வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களை எதிர்பார்த்திருக்க முடியும். இந்தத் தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நான்காவது அணிக்கு ஒரு ஆசனம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தது. ஆனால், அதாஉல்லா அது குறித்து ஏன் யோசிக்கவில்லை என்று தெரியவில்லை. ஆகக்குறைந்தது, தனது சொந்தக் கட்சியில் போட்டியிட்டிருந்தால், இவ்வாறானதொரு படுதோல்வியையாவது அவர் தவிர்த்திருக்கலாம்.

அதாஉல்லாவின் தோல்விக்கு மற்றுமொரு காரணம், அவரின் பிரதேச வாதமாகும். தனது சொந்த ஊரான அக்கரைப்பற்றினை முன்னிறுத்திய அரசியலையே அவர் செய்து வந்தார். அவருக்குக் கிடைத்த பெருமளவான நிதியினை அக்கரைப்பற்றிலேயே குவித்தார். அம்பாறை மாவட்டத்துக்கான வளப்பங்கீடுகளை, அக்கரைப்பற்று நோக்கியே அவர் திருப்பினார். இவ்வாறான நடவடிக்கையினால், ஏனைய பிரதேச மக்களின் கோபத்தினை அதாஉல்லா மிக இலகுவாகச் சம்பாதித்துக் கொண்டார்.

அப்படியென்றால், ஓர் அமைச்சராகப் பதவி வகித்த அதாஉல்லா, தனது சொந்த ஊரை அபிவிருத்தி செய்தது பிழை என்கிறீர்களா என, உங்களில் யாரேனும் கேட்கக் கூடும். அவர் தனது சொந்த ஊரை வளப்படுத்தியது தவறல்ல. தனது ஊரை மட்டுமே வளப்படுத்தினார் என்பதுதான் இங்கு தவறாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இன்னொருபுறம், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக பாரிய அட்டூழியங்கள் புரியப்பட்டபோதெல்லாம், அவற்றினை நியாயப்படுத்துவதற்கும், மூடி மறைப்பதற்கும் அதாஉல்லா பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொண்டார். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குசிப்படுத்துவதற்காகவே அதாஉல்லா அப்படிச் செய்தார்.

தம்புள்ளை பிரதேசத்திலுள்ள முல்லிம்களின் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷவின் சபையிலே, அதாஉல்லா அமைச்சராக இருந்தார். அந்தப் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்ட செய்தி கேட்டு, முஸ்லிம்கள் கவலையும், ஆத்திரமும் கொண்டார்கள். ஆனால், தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அப்படியெதுவும் நடக்கவேயில்லை என்று அதாஉல்லா வாதிட்டார்.

இந்த நிலையில், பள்ளிவாசல் சேதமாக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின. அப்போது, ‘பள்ளிவாசலின் கூரைத் தகடு ஒன்றுதான் கழன்று விழுந்துள்ளது’ என்றும், ‘வேறு ஒரு பாதிப்பும் பள்ளிவாசலுக்கு ஏற்படவில்லை’ என்றும், அதாஉல்லா கூறத் தொடங்கினார். ஆனால், மஹிந்த ராஜபக்ஷவின் ஆளுந்தரப்பிலிருந்த முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், தம்புள்ளை பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டமையினை பகிரங்கப்படுத்தியதோடு, அதற்கு எதிராகப் பேசவும் தொடங்கினர். இதனால், கலவரமடைந்த அதாஉல்லா – என்ன சொன்னார் தெரியுமா? ‘பள்ளிவாசல்கள் சேதமாக்கப்படுவதும், உடைக்கப்படுவதும் ஒன்றும் புதிதில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே எதிரிகள் பள்ளிவாசல்களை உடைத்திருக்கிறார்கள்’ என்று பகிரங்க மேடைகளில் பேசத் தொடங்கினார்.

அதாஉல்லா மீது, முஸ்லிம் மக்கள் ஆத்திரம் கொள்வதற்கு, இவையும் பிரதானமானவையாக அமைந்தன. முஸ்லிம்களின் மதஸ்தலங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய ஒருவரே, அதனை நியாயப்படுத்திப் பேசியமையானது, முஸ்லிம் மக்களை பெரிதும் ஆத்திரப்படுத்தியது. அந்த ஆத்திரத்தினால்தான், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அதாஉல்லாவை மக்கள் புறக்கணித்தார்கள்.

இந்தத் தோல்வியானது, அதாஉல்லாவை மிகக் கடுமையாகப் பாதித்திருக்கும். இதிலிருந்து மீண்டு, அவர் – நேரடி அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவாரா என்பது கேள்விக் குறிதான். இன்னொருபுறம், அதாஉல்லாவின் இடத்தை அவரின் முகாமிலிருந்து நிரப்புவதற்கு யாரேனும் இருப்பதாகவும் தெரியவில்லை.

அரசியலை கற்க விரும்புகின்றவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஒரு மோசமான பாடமாக இருக்கின்றார்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்