அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

🕔 April 19, 2018

– மப்றூக் –

ம்பாறை மாவட்டத்தில் தற்போதை சிறுபோகத்தில் சுமார் 25 வீதமான நெற்செய்கைக் காணிகளிலேயே விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால், பெருமளவான விவசாயிகள் நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோகங்களின்போது நெற்செய்கைக்கான நீரை வழங்கும் இக்கினியாகல குளத்தில் கணிசமானளவு நீர் குறைந்துள்ளமை காரணமாகவே, இம்முறை மிகக் குறைந்தளவு நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு விவவாசயத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோகக் காலப்பகுதியில் போதியளவான நீர் கிடைக்குமாயின் 01 லட்சத்து 83 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும். ஆனால், இம்முறை 48 ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகளில் மட்டுமே நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிறுபோகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்தக் காணிகளில் சுமார் 25 வீதம் பரப்பளவுள்ள காணிகளில் மட்டுமே, இம்முறை நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இக்கினியாலகல குளத்தில் 07 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் அடி அளவான நீர் இருக்கும் போது மட்டுமே, சிறுபோகங்களில் நெற்செய்கை மேற்கொள்ளக் கூடிய அனைத்து காணிகளிலும் விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.

ஆனால், தற்போது இக்கினியால குளத்தில் 01 லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் அடி நீர் மட்டுமே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதாவது, இக்கினியாகல குளத்தில் சுமார் 20 வீதமானளளவு நீர் மட்டுமே சேமிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் சுமார் 25 வீதமானளவு நிலப்பரப்பில் மட்டும் நெற் செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக, இம்முறை அம்பாறை மாவட்டத்தில் நெல் விளைச்சலில் கடுமையான வீழ்ச்சி ஏற்படும் என்றும், இதனால் பாரிய பஞ்சம் ஏற்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

நாட்டின் நெல் உற்பத்தியில் 23 வீதமான பங்களிப்பினை அம்பாறை மாவட்டம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில், நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படாத பகுதிகளிலுள்ள விவசாயிகள், நெற் செய்கை மேற்கொள்வதற்கான அனுமதியினை தமக்கு பெற்றுத் தருமாறு, வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதேவேளை, நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள காணிகளில் தற்போது பண்படுத்தல் மற்றும் விதைப்பு நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதும், அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட காணிகளில், இந்த மாதம் 30ஆம் திகதிக்குள் விதைப்பு நடவடிக்கைகள் அனைத்தினையும் விவசாயிகள் முடித்துக் கொள்ள வேண்டுமென, விவசாயத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்