முஸ்லிம் அரசியலும், கூர் மழுங்கிய கருவிகளும்

🕔 April 17, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

‘ஒரு மரத்தை வெட்டுவதற்கு எனக்கு 06 மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் 04 மணி நேரத்தை கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்’ என்று ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார், எல்லா செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக இருக்கின்றன. கருவிகள் என்பவை ‘ஆயுதங்களாக’ மட்டும் இருப்பதில்லை. ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ‘பிரசாரம்’ என்பது மிக முக்கியமான கருவியாகும். அரசியலில் வெற்றி பெறுவதற்கும் – வெற்றிகரமாக அரசியலை மேற்கொள்வதற்கும் கருவிகள் அவசியமாகும். ஆனாலும் அரசியலரங்களில் கணிசமானோர் கூர் மழுங்கிய கருவிகளை வைத்து கொண்டுதான், கட்சிகளையும் அதனூடாக அரசியலையும் நடத்திக் கொண்டிருகின்றனர்.

தமிழர்களின் அரசியலில் கூரான கருவிகளே அநேகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இப்போதும், அவர்களின் அரசியல் வெற்றிகரமான திசையில் சென்று கொண்டிருப்பதற்குக் காரணம், கூர்மையான கருவிகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றமையாகும். நாடாளுமன்றத்தில் த.தே.கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே, தமது சமூகத்தின் நலனுக்காக பல்வேறு வியடங்களைச் சாதித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுந்தரப்பில் இருக்கும் நிலையில் கூட, முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளும் அபிலாசைகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளமை கவலைக்குரியதாகும். குறிப்பாக, அரசாங்கத்தில் இரண்டு முஸ்லிம் கட்சிகள் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் நிலையில், முஸ்லிம்கள் சமூகம் அச்சத்தினுள்ளும் அவமானங்களினுள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றமை வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

முஸ்லிம் கட்சிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசியலை மேற்கொள்வதற்குரிய கூர்மையான கருவிகள் இல்லை என்பதே இதற்கான காரணமாகும். அரசியல் கருவிகளை தேவைக்கேற்றவாறு ஆயுதங்களாகவும் கேடயங்களாகவும் பயன்படுத்தத் தெரிந்த கட்சிகள், தமது சமூகத்தினருக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், முஸ்லிம் அரசியலரங்களில் அதிகமானோர் தம்மிடமுள்ள கருவிகளால், அநேகமான தருணங்களில் முதுகுகளைச் சொறிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

ஆட்சியாளர்களிடம் பொன் முட்டையிடும் பறவைகளை, தட்டிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம், தங்கத்தாலான பிச்சைப் பாத்திரங்களையே அநேகமான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கேட்டுப் பெற்றுக் கொண்டன என்பதுதான் வரலாறாகும். தற்போதைய தேசிய அரசாங்கம் அமைவதற்கு பெரிதும் காரணமாக சிறுபான்மை மக்களே இருந்தனர். ஆனாலும், அதற்கான பிரதியுபகாரங்களை இந்த ஆட்சியாளர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்துக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள் தவறியுள்ளன.

தற்போதைய அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளிக்கும் போதெல்லாம், அதற்குப் பிரதியுபகாரமாக தமது சமூகம் சார்பான தேவைகளை – கோரிக்கைகளாக முன்வைத்து, அந்தக் கட்சி – கேட்டுப் பெற்றுக் கொண்டு வருகிறது. ஆனால், முஸ்லிம் கட்சிகளோ அரசாங்கத்துக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்தும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூகம் சார்பான கோரிக்கைகள் எவற்றினையும் முன்வைத்து வென்றெடுத்ததாகத் தெரியவில்லை.

அண்மையில் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் 07 பேரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். அவர்களில் 06 பேர் சிங்களவர்கள். வடமேல் மாகாணத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட கே.சி. லோகேஸ்வரன் மட்டும் தமிழராவார். இந்த நிலையில், முஸ்லிம்கள் எவரும் இலங்கையில் ஆளுநர் பதவியில் தற்போது இல்லை. இது குறித்து முஸ்லிம் அரசியல் கட்சிகளோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ அக்கறை காட்டுவதாகவும் தெரியவில்லை.

வட மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்கின்றமையினால், அந்த மாகாணத்துக்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று, தமிழர்களின் அரசியல் கட்சிகள் உரத்துக் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆயினும், தமிழர் ஒருவரை வடமேல் மாகாணத்துக்கான ஆளுநராக ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.

இந்த நிலையில், முஸ்லிம் ஒருவரை மாகாண ஆளுநராக நியமிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் கட்சிகளோ, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைகளை உயர்த்துகின்ற ஒரு தருணத்திலாவதுளூ ‘முஸ்லிம் ஒருவரை மாகாண ஆளுநராக நியமிக்க வேண்டும்’ என்கிற நிபந்தனையினை ஏன் முன்வைக்க முடியாமல் போயிற்று என்கிற கேள்விகளுக்கு, முஸ்லிம் அரசியல் கட்சிகள் விடை கூறியே ஆகவேண்டும்.

முஸ்லிம் ஆளுநர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கவில்லை என்பது, தற்போது அரசியலரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. ‘மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷ கௌரவித்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதியாகச் சித்தரிப்பவர்களுக்கு தான் ஞாபமூட்ட விரும்புவதாக’ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை இங்கு அவதானத்துக்குரியதாகும். நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை கௌரவிக்கவில்லை என்பதை, இதனூடாக நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கின்றார். நடப்புக்களைப் பார்க்கின்றபோது, அது பொய்யில்லை போல்தான் தெரிகிறது.

இலங்கையில் கடைசியாக மாகாண ஆளுநர் பதவியை வகித்தவர் அலவி மௌலானா ஆவார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில், மேல் மாகாண ஆளுநராக அலவி மௌலானா நியமிக்கப்பட்டார். பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷவும், அலவி மௌலானாவை மேல் மாகாண ஆளுராக நியமித்தார்.

அந்த வகையில் 2002ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, ஆளுநராக அலவி மௌலானா பதவி வகித்தார்.

இதற்கு முன்னர் முஸ்லிம் ஆளுநராக பாக்கீர் மாக்கார் பதவி வகித்தார். 1988ஆம் ஆண்டு தொடக்கம் 1993ஆம் ஆண்டுவரை தென் மாகாண ஆளுநராக பக்கீர் மாக்கார் இருந்தார். முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தருமான இம்தியாஸின் தந்தையாரான பாக்கீர் மாக்கார்ளூ சபாநாயகராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களில் இவர்கள் இருவர் மட்டுமே மாகாண ஆளுநர்களாக பதவி வகித்துள்ளனர்.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது முஸ்லிம்களின் பேராதரவுடன் அமையப்பெற்றுள்ள போதும், முஸ்லிம் ஆளுநர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டவில்லை. மேலும், அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளும் இது குறித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள 07 ஆளுநர்களில் முஸ்லிம் ஒருவர் கூட இல்லை என்பது, முஸ்லிம் சமூகத்தினுள் ஏமாற்றமானதொரு மனநிலையை ஏற்படுத்தியுள்ளமையினை அவதானிக்க முடிகிறது.

இன்னொருபுறம், இலங்கையில் மாவட்ட அரசாங்க அதிபராகவும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரும் தற்போது பதவிகளில் இல்லை என்பதும் முஸ்லிம் சமூகத்தினருக்கு மற்றுமொரு ஏமாற்றமாகும். முஸ்லிம் சமூகத்திலிருந்து எம்.எம். மக்பூல் மட்டுமே முதலும் கடைசியுமாக அரசாங்க அதிபராகப் பதவி வகித்தார். யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட மக்பூல்; மன்னார் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய பொழுது, 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர் ஆயுதக் குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரச நிருவாக சேவையில் முக்கிய பதவிகளை வகித்த பல முஸ்லிம்கள், தமிழர் ஆயுதக் குழுக்களால் ஒரு காலத்தில் மிகத் திட்டமிட்டுக் கொல்லப்பட்டார்கள். அதற்கு முதலில் பலியானவர் முன்னாள் அரசாங்க அதிபர் மக்பூல் எனக் கூறப்படுகிது. அதேபோன்று வாழைச்சேனையைச் சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் ஏ.கே. உதுமான், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை. அஹமட், மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஏ.சி. ஹபீப் முகம்மட், குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் இப்றாஹிம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய நற்பிட்டிமுனை பளீல் உள்ளிட்ட பலர், தமிழர் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.

மன்னார் அரசாங்க அதிபர் மக்பூல் மரணித்த பிறகு, முஸ்லிம் சமூகத்திலிருந்து எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை. ஆனாலும், அந்தப் பதவிக்கு நியமிக்கப்படக் கூடிய பல முஸ்லிம்கள், இலங்கை நிருவாக சேவை சிரேஷ்ட தரங்களில் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்காவது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டிய நியாயம் உள்ளமையினை மறுக்க முடியாது.

வடக்கு மாகாணத்திலுள்ள 05 மாவட்டங்களில், தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள 03 மாவட்டங்களுக்கு, தமிழர் சமூகத்திலிருந்து அரசாங்க அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ரூபாவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகவும், நாகலிங்கம் வேதநாயகன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராகவும், சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர் சமூகத்தின் அரசியல் வெற்றியாகவும் இதனைப் பார்க்க முடிகிறது.

ஆனால், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ளஅம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஒன்றுக்கேனும் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை என்பது விசனத்துக்குரியதாகும். நாட்டில் 25 நிருவாக மாவட்டங்கள் உள்ளன. எனவே, வீதாசார அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் வழங்குவதென்றாலும், 10 வீதமாகவுள்ள முஸ்லிம் சமூகத்திலிருந்து ஆகக்குறைந்தது 02 அரசாங்க அதிபர்களேனும் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆக, மத்திய அரசாங்கத்தின் நேரடி பிரதிநிதிகளாகச் செயற்படும் மாகாண ஆளுநர்களாகவும், மத்திய அரசின் நேரடி நிருவாக அதிகாரிகளாகச் செயற்படும் மாவட்ட அரசாங்க அதிபர்களாகவும் இலங்கையில் முஸ்லிம்கள் எவரும் இல்லை என்பதிலிருந்தே, நாட்டில் முஸ்லிம்கள் எந்தளவுக்கு புறக்கணிப்புக்குள்ளாகி உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும், முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அரசியல் கருவிகளை எத்துணை மழுங்கிய நிலையில் பயன்படுத்தி வருகின்றனர், அல்லது பயன்படுத்தாமலேயே வைத்திருக்கின்றனர் என்பதையும் இதனூடாக விளங்கிக் கொள்ளலாம்.

இன்னொருபுறம் இலங்கை நிருவாக சேவையில் சிரேஷ்டத்துவம் கொண்ட பல முஸ்லிம்கள், மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களை விடவும் சிரேஷ்டத்துவம் குறைந்த வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலைவரமானது, இலங்கை நிருவாக சேவையில் சிரேஷ்டத்துவம் கொண்ட முஸ்லிம்களுக்கு மன உளைச்சலையும், தன்மானச் சிக்கலையும் ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது.

எனவே, இவற்றுக்கான பொறுப்புக்கள் அனைத்தினையும், அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே ஏற்க வேண்டும்.

தமிழர்களினதும், தமிழர் கட்சிகளினதும் அரசியல் கருவிகள், மலைகளை உடைத்துக் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கருவிகளோ, நாம் மேலே குறிப்பிட்டதைப் போல், முதுகுகளைச் சொறியவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கூர் மழுங்கிய கத்தியைக் கொண்டு, ஒரு வெங்காயத்தைக் கூட வெட்டுவதற்கு நாம் கஷ்டப்படுகின்றபோது, கூரில்லாத அரசியல் கருவிகளை வைத்துக் கொண்டு முஸ்லிம் கட்சிகள் எதையாவது ‘கிழி’க்கும் என்று நாம் நம்புவது, அப்பாவித்தனத்தனத்தின் உச்சமாகும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (17 ஏப்ரல் 2018)

Comments