எதிரணிக் கோட்டைகளில் மக்கள் காங்கிரஸ் கொடி; வெற்றிப் பரப்பு விரிகிறது

🕔 April 13, 2018

– சுஐப் எம். காசிம் –

டமாகாணம் – மன்னார் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்துவந்த மாந்தை மேற்கு மற்றும் மன்னார் ஆகிய இரண்டு பிரதேச சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் காலாகாலமாக முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த நிந்தவூர், சம்மாந்துறை பிரதேச சபைகளையும் இறக்காமம் பிரதேச சபையில் பிரதித் தவிசாளர் பதவியையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றி இருப்பது அக்கட்சியின் கணிசமான வளர்ச்சியையும், அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆளுமையையுமே புலப்படுத்தி நிற்பதாக கூறப்படுகின்றது.  

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபையில் ஒரேயொரு உறுப்பினரை மாத்திரம் கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இந்த ஆண்டில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதே மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளை கைப்பற்றி இருப்பது மக்கள் காங்கிரஸின் அபார வெற்றியாகும். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திலேயே இந்தக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டது.

அது மாத்திரமின்றி வடக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் நீண்டகாலமாக இருந்து வந்த சபைகளை கைப்பற்றியமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் மீது தமிழ் மக்கள் கொண்டிருக்கும் அன்பையும், அவர் மீதுகொண்ட நம்பிக்கையையுமே வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியத்துக்குள் பழக்கப்பட்ட மன்னார் மாவட்ட தமிழ் மக்களின் மனமாற்றத்தையும் இது உணர்த்துகின்றது. உதாரணமாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாந்தை மேற்கு பிரதேசத்தில், 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ், கணிசமான வெற்றிகளை பெற முடியாத போதும், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அண்ணன் செல்லத்தம்பு தலைமையில் ஐ.தே.க வின் யானை சின்னத்தில் போட்டியிட்டு, பதினோரு ஆசனங்களை பெற்றிருப்பது அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இன, மத பேதமில்லாத பணிகளுக்குக் கிடைத்த பிரதிபலனாகும்.

அதுவும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் கீழான முக்கிய கிராமமான விடத்தல் தீவு, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண அமைச்சர் குணசீலன் ஆகியோரின் பூர்வீகக் கிராமமாகும். அதுமாத்திரமின்றி, அதே பிரதேசத்தில் உள்ள அடம்பன் கிராமமானது, முன்னாள் வடமாகாண அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான டெனீஸ்வரனின் சொந்தக் கிராமமுமாகும். இந்தப் பிரதேசத்தில் இவ்வாறான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகார பலத்துக்குள் நின்றுகொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசியல் செய்வதென்பது வியத்தகு சாதனையாகும்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் போக்காளர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர் சிராய்வா போன்றவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியிலே அரசியல் போராட்டம் நடத்தி, மன்னார் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் வெற்றி கொண்டுள்ளது.

அதேபோன்று, முசலிப் பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல்வேறு சதிகளைத் தாண்டி தம்வசமாக்கியுள்ளது. தேர்தல் காலங்களிலே “இவ்விரண்டு பிரதேச சபைகளையும் நாங்கள்தான் வெற்றிகொள்வோம். மக்கள் காங்கிரஸை விரட்டியடிப்போம்” என்று மேடைகளிலே வாய் கிழிய கத்தியோர் இன்று வெட்கித் தலை குனிந்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என வர்ணிக்கப்படும் அம்பாறை கோட்டைக்குள் மக்கள் காங்கிரஸ் ஊடுருவி, மூன்று சபைகளையும் கைப்பற்றிய ஆத்திரத்திலும், ஆவேசத்திலும், கையாலாகாத்தனத்திலுமிருந்த முஸ்லிம் காங்கிரஸார், வடமாகாணத்தில் முஸ்லிம்களுக்கு உரித்தான ஒரேயொரு முஸ்லிம் பிரதேச சபையான முசலிப் பிரதேச சபையை, எப்படியாவது பதிலுக்கு கைப்பற்றி, வன்னி அமைச்சருக்கு பாடம் கற்பித்துவிட வேண்டும் என்று துடியாய்த் துடித்தனர்.

முன்னதாக, தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினரான, எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ரயீஸ் என்பவரின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த பண்டாரவெளி விரிவுரையாளர் நியாஸ் என்பவரை அந்தப் பதவிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை நியமித்தமையும் இந்த வியூகத்தின் அடிப்படையில்தான்.

முசலிப் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், முத்தலிப் பாவா பாரூக்  ஆகியோர் தமது சொந்தப் பிரதேசமான முசலியிலேயே தேர்தல் காலத்தில் தொடர்ச்சியாக முகாமிட்டு, தீவிரப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டிருந்தனர்.

இது மாத்திரமின்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முசலிப் பிரதேசத்தில் மேற்கொண்ட அனைத்துப் பணிகளையும் கொச்சைப்படுத்தி முகநூல்களிலும், இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு செய்திகளை பரப்பி, மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளில் ரிஷாட்டின் அரசியல் எதிரிகள் குறியாகச் செயற்பட்டனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோட்டையான முசலிப் பிரதேச சபையை பறித்தெடுப்பதற்கான தேர்தல் வியூகங்களையும் வகுத்தனர். தேர்தல் முடிந்த பின்னர் ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளில் முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்தானுடனும் இணைந்து ஓர் உடன்பாட்டின் அடிப்படையில் காரியங்களைக் கச்சிதமாக நடத்தியது.

முசலிப் பிரதேச சபையின் கொண்டச்சி வட்டாரத்தில் மஸ்தான் எம்.பி, தனது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக வேட்பாளர் ஒருவரை நிறுத்தி, மக்கள் காங்கிரஸின் வெற்றியை இல்லாமலாக்க எடுத்த முயற்சியில் தோல்வி கண்டார். எனினும், முசலிப் பிரதேச சபையில் ஆங்காங்கே சேகரிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், கட்சிக்குக் கிடைக்கப்பெற்ற போனஸ் ஆசனத்தை, கரடிக்குளி – கொண்டச்சி வட்டாரத்தில் தோல்வியுற்ற வேட்பாளருக்கு வழங்கினார். அதே பிரதிநிதி, தவிசாளர் தெரிவின் போது, மக்கள் காங்கிரசஸுக்கு வாக்களித்தமை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீது அவர் கொண்ட பற்றும், அவருக்கு வாக்களித்த கொண்டச்சி மக்கள் அமைச்சர் மீது கொண்ட நம்பிக்கையுமே காரணம் என பரவலாக பேசப்படுகின்றது.

முசலிப் பிரதேச சபையை எப்படியாவது வென்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை வீழ்த்தி விடலாம் என்ற கனவில் மிதந்த அமைச்சரின் அரசியல் எதிரிகளும், இனவாதிகளும் இப்போது மூக்குடைபட்டு நிற்கின்றனர்.

மக்கள் காங்கிரஸிடம் மன்னார் பிரதேச சபை வீழ்ந்த கையோடு கொதிப்படைந்து போன முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, திருமலையிலிருந்து ஹெலிகொப்டரில் யாழ்ப்பாணத்துக்கு பறந்ததும், நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை அங்கு வரவழைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய ரகசிய பங்கர் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தற்போது ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – சுதந்திரக் கட்சியின் உள்ளூர் முக்கியஸ்தர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் ஈடுபட்டிருந்த போதும், இறைவனின் நாட்டத்தினால் முடிவுகள் மக்கள் காங்கிரஸுக்கு வெற்றியாகவே அமைந்தன.

மன்னார் மாவட்டத்தில் அடங்கும் முசலிப் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, மன்னார் நகரசபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து சபைகளில், மூன்று சபைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸ் கைப்பற்றிக்கொண்டமை, வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை என சிலாகிக்கப்படுகின்றது. அதுவும் கிறிஸ்தவ, இந்து, இஸ்லாமிய மக்கள் பின்னிப்பிணைந்து வாழும் மாந்தை மேற்கு பிரதேசத்தில் தமிழ்ப் பெருமகன் ஒருவரை மக்கள் காங்கிரஸ் ஆட்சிக் கதிரையில் அமரவைத்து அழகு பார்த்துள்ளது.

அத்துடன் முசலிப் பிரதேச சபையின் கீழான சிங்கள விஜயகம்மான மக்களும், மக்கள் காங்கிரஸுக்கே வாக்களித்தமை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஓர் இனவாதியாகச் சித்தரித்து, அபாண்டங்களை பரப்புவோருக்கு சாட்டையடியாகியுள்ளது.

மன்னாரில் நானாட்டான் பிரதேச சபையின் ஆட்சிப் பங்காளியாகும் சந்தர்ப்பம் மக்கள் காங்கிரஸுக்கு இருந்த போதும், இறுதி நேரத்தில் இடம்பெற்ற துரோகத்தனங்களின் காரணமாக அது கை நழுவிப்போனது.

தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின் போது, சுழற்றப்பட்ட நாணயமும் மக்கள் காங்கிரஸுக்கு கை விரித்ததனால் அந்த சபையை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

இதனைத் தவிர, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிட்டிய பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை ஆகியவற்றிலும் பங்காளிக் கட்சியாக உள்ளது. வன்னி மாவட்டத்தில் வவுனியா, முல்லைத்தீவு பிரதேச சபைகளிலும் மக்கள் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. அத்துடன், தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட குருநாகல், கண்டி, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க ஆசனங்களைப் பெற்றிருப்பது, அக்கட்சி தேசிய ரீதியில் வியாபித்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் காங்கிரஸ் தமிழர் ஒருவரை பிரதேச சபை ஒன்றில் தலைவராக்கியதும், முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை, யாழ்ப்பாண மாநகர சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளித்ததும், இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களால் மெச்சப்படுவதை அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

திருமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு கணிசமான ஆதரவும், அக்கட்சித் தலைவர் மீது அந்த மாவட்ட மக்களுக்கு பேரபிமானமும் இருக்கின்ற போதும், கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், கட்சியின் உள்ளூர் செயற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் தேர்தலில் சோபிக்க முடியாமல் போய்விட்டமை வருந்தத்தக்கதாகும்.                                

  

Comments

புதிது பேஸ்புக் பக்கம்