அறூஸ் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்; ஆப்தீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை

🕔 April 13, 2018

ட்டாளைச்சேனை பிரதேச ஊடகவியலாளர் எஸ்.எம். அறூஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்து, அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு தொடர்பாக, ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் எழுதிய செய்திகள் புதன்கிழமையன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

இது தொடர்பில் ஆத்திரமுற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன்; ஊடகவியலாளர் அறூஸூக்கு தொலைப்பேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ள அதேசமயம், அவரின் நண்பருடைய வீட்டில் வைத்து தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசலையில் அனுமிக்கப்பட்ட ஊடகவியலாளர் அறூஸ், சிகிச்சை பெற்ற பின்னர் நேற்று இரவ வீடு திரும்பியுள்ளார்.

நிகழ்வுகளை உரிய முறையில் அறிக்கையிடுவதும் உண்மையை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்வதும் ஊடகவியலாளர்களின் பிரதான கடமையாகும். அந்த அடிப்படையில் தனது கடமையை நிறைவேற்ற முற்பட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியதை, ஊடக அமைப்பு என்ற வகையில் எம்மால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும் வகையில், தாக்குதல் நடத்திய பிரதேச சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைபீடம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments