சவால்களை ரசிக்கும் போர்க்குண மனிதன்: ஆசையின் தூரம், ஆறாயிரம் கிலோமீற்றர்

🕔 April 13, 2018

– மப்றூக் –

மூத்த ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லா, மோட்டார் சைக்கிள் மூலம் ஹஜ் செல்வதற்காக விண்ணப்பித்துள்ள செய்தி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இன்னொருபுறம் ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ எனக் கேட்டு, சிலர் எழுதியுள்ளமையினையும் காணக் கிடைக்கிறது.

திராணி

ஊடகவியலாளர் புவியை ஓரளவேனும் அறிந்தவர்கள், ‘இந்தாளுக்கு இது தேவைதானா’ என்று, ஒருபோதும் கேட்க மாட்டார்கள். அடிப்படையில் புவி ரஹ்மதுல்லா ஒரு கலகக்காரர். அநீதிகளை – கண்டும் காணாமல் கடந்து செல்லத் தெரியாதவர். சவால்களை எதிர்கொள்கின்ற போர்க் குணம் கொண்டவர். முற்போக்கானவர். தனக்கு நியாயமாகப் பட்டதை அச்சமின்றி சொல்லும் – செய்யும் திராணியுள்ளவர்.

அதனால்தான், இவ்வாறானதொரு சவால் நிறைந்த அனுபவமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு அவர் ஆசைப்படுகின்றார்.

தன்னிடமுள்ள சிறிய ரக மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு, நாட்டுக்குள் சுற்றித் திரிந்த – திரிகின்ற அனுபவங்கள் புவிக்கு ஏராளம் உள்ளன.

“அதற்காக, மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் போகும் பயணம் தேவைதானா” என்றுதானே கேட்கிறீர்கள்?

சவால்களை ரசித்தல்

நம்மில் பலர் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு பேரப் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் முதுமைக்கால பணிகளைச் செய்து கொண்டிருக்கும் வயதுகளில்தான், உலகில் வேறு சிலர் – பெரும் சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.

பெரும் ஆபத்துக்கள் நிறைந்த மலையொன்றில் உயிரைப் பணயம் வைத்து ஏறும் ஒருவரைக் காணும் சாதாரணமானவர்களுக்கு, “இது தேவைதானா” என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால், சவால்களை ரசிப்பவர்களுக்கு அதுவே சுவாரசியமான அனுபவமாக இருக்கும்.

அந்த வகையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானத்திலும், அங்கிருந்து ஹஜ் கடமைக்காக சஊதி அரேபியாவின் மக்காவுக்கு மோட்டார் சைக்கிளிலும் செல்வதற்கு புவி ரஹ்மத்துல்லா ஆர்வப்பட்டுள்ளார்.

இதுவரை கண்டிராத தேசங்களினூடாக, ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட கிலோமீற்றர்களை கடந்து செல்லும் பேரனுபவம், உலகில் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்கிறீர்கள். அந்த அனுபவத்துக்காக புவி ஆசைப்படுகிறார்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

பயணக் கணக்கு

ஊடகவியலாளர் புவி ரஹ்மதுல்லாவுக்கு இந்தப் பயணம் சாத்தியமானால், அவர் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும், எந்த நாட்டையெல்லாம் கடந்து செல்ல வேண்டும். அதற்காக எவ்வளவு நாட்கள் தேவைப்படும் என்பதையெல்லாம் பருமட்டான ஒரு கணக்கில் பார்ப்போமா?

கூகுல் வரைபடத்தை உதவிக்காக எடுத்துக் கொள்வோம்.

இலங்கையிலிருந்து இந்தியாவின் சென்னை நகருக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து மக்கா நகருக்கு தரைவழியாகப் பயணம் செல்வதென்றால், 6829 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டும்.

அதுவே, இலங்கையிலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து தரை வழியாக மக்கா பயணிப்பதாயின் 5500 கிலோமீற்றர்கள் பயணிக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து தரை வழியாக சஊதி அரேபியாவின் மக்கா நகரை அடைவதற்குள் பாகிஸ்தான், ஈரான், ஈராக், குவைத் ஆகிய நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கும். அதன் பின்னர்தான் சஊதி அரேபியாவுக்குள் நுழைந்து மக்கா நகரை அடையலாம்.

சாதாரணமாக புவி ரஹ்மதுல்லா நளொன்றுக்கு எத்தனை மணித்தியாலம் பயணிப்பது சாத்தியம் என்பதை முதலில் கணக்கிடுவோம்.

காலை வேளை சுபஹ் தொழுகையை நிறைவேற்றி விட்டு, ஏனைய கடமைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, காலை  7.00மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கிறார் என வைத்துக்கொள்வோம்.

ஏழு மணியிலிருந்து 10 மணி வரை பயணம். இடையில் அரை மணித்தியாலம் தேநீர் இடைவேளை. பிறகு பயணத்தை தொடர்தல். 12 மணிக்கு லுஹர் தொழுவதற்காக பயணத்தை நிறுத்துகிறார்.  நாலரை மணித்தியாலம் பயணப்பட்டுள்ளார்.

12 மணியிலிருந்து 2.00 மணிவரை தொழுகை மற்றும் பகல் சாப்பாட்டை நிறைவு செய்து விட்டு பயணத்தை ஆரம்பிக்கின்றார். பின்னர், அஸர் தொழுகைக்காக 3.30 மணிக்கு பயணத்தை நிறைவு செய்கிறார். இதன்போது ஒன்றரை மணித்தியாலம் பயணம் நிறைவேறியிருக்கும்.

ஒரு தேநீரை அருந்தி விட்டு 4.00 மணிக்கு மீண்டும் பயணத்தை ஆரம்பித்து, இரவு 8.00 மணிவரை பயணிக்கிறார். இப்போது 04 மணி நேர பயணமொன்று நிறைவுபெறுகிறது.

அதற்கு பிறகு மறுநாள் காலை வரை பயணமில்லை. நிம்மதியாக தூங்கியெழுந்த பிறகு, மறுநாள் புத்துணர்ச்சியுடன் பயணம் ஆரம்பமாகிறது.

இந்தக் கணக்கின்படி, நாளொன்றுக்கு 10 மணித்தியாலங்கள் புவி ரஹ்மதுல்லா பயணிக்கிறார்  என வைத்துக் கொள்வோம்.

சரி, மோட்டார் சைக்கிளில் சராசரியாக மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் புவி பயணம் செய்தால், 10 மணித்தியாலத்துக்கும் 500 கிலோமீற்றர் தூரத்தினை அவரால் கடந்து செல்ல முடியும்.

மொத்தக் கணக்கு

எனவே, டெல்லியிலிருந்து மக்காவுக்குச் செல்வதற்கான 5500 கிலோமீற்றர் தூரத்தினையும் மோட்டார் சைக்கிளில் கடப்பதற்கு,  சுமார் 11 நாட்கள் தேவையாக இருக்கும்.

அதுவே, சென்னையிலிருந்து மக்காவுக்குச் செல்வதாயின், அதற்குரிய 6829 கிலோமீற்றர் தூரத்தினையும் மோட்டார் சைக்கிளில் கடப்பதற்கு சுமார் 14 நாட்கள் தேவைப்படும்.

சரி, இந்தப் பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத தடங்கல்கள், சுகயீனங்கள் காரணமாக ஏற்படும் தாமதங்களின் நிமித்தம், குறித்த பயணத்தில் மேலும் 03 நாட்களைச் சேர்த்துக் கொள்வோம்.

அவ்வாறாயின் சென்னையிலிருந்து மக்காவுக்கான பயணத்துக்கு 14 நாட்களும், டெல்லியிலிருந்து மக்காவுக்கான பயணத்துக்கு 17 நாட்களும் தேவையாக இருக்கும்.

இதற்காக, ஏற்படும் எரிபொருள் செலவு என்ன என்பதையும் இங்கு கணக்கிட்டுக் கொள்வோம்.

ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 40 கிலோமீற்றர் பயணிக்கும் மோட்டார் சைக்கிளொன்றினை புவி பாவிக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அவ்வாறாயின், சென்னையிலிருந்து மக்காவுக்குச் செல்லும் பயணத்துக்கான எரிபொருள் செலவாக (இலங்கையில் பெற்றோலுக்கான விலையின் அடிப்படையில்) சுமார் 19,975 ரூபாய் செலவிட வேண்டும். இருபதாயிரம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோமா? அப்படியாயின் போய் வருவதற்கு ஆகக்குறைந்தது 40 ஆயிரம் ரூபாய் எரிபொருளுக்காக செலவிட வேண்டியிருக்கும்.

பாரமல்ல

எவ்வாறாயினும் இந்தப் பயணம் இலகுவானதாக இருக்கப் போவதில்லை என்பதும் உண்மைதான். அரசாங்க ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் வயதினையும் கடந்துள்ள புவி ரஹ்மதுல்லா; மொழிகள் தெரியாத, பாதைகள் அறியாத தேசங்களின் ஊடாக இந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு துணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இன்னொருபுறம், ‘மலையைச் சுமந்த அனுமாருக்கு, புடுக்கு ஒரு பாரமில்லை’ என்று, கிராமப்புறங்களில் வயதானவர்கள் கூறுவதும் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

காத்தான்குடியில் ஹிஸ்புல்லா என்கிற அரசியல்வாதியின் அதிகாரத்தை எதிர்த்துக் கொண்டு, தனிமனிதனாய் ‘வார உரைகல்’ எனும் பத்திரிகையொன்றை பல்லாண்டுகள் நடத்தி வந்த ஊடகவியலாளர் புவி ரஹ்மத்துல்லாவுக்கு, மோட்டார் சைக்கிளில் மக்காவுக்குச் செல்லும் இந்தப் பயணம், அத்தனை சவாலாக இருக்காது என்றும் நம்பலாம்.

இந்தப் பதிவைப் புரிந்து கொள்வதற்கான செய்தி: மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

Comments