காத்தான்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை மு.கா. தலைவர் பார்வையிட்டார்; உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் உத்தரவு

🕔 August 23, 2015
– பழுலுல்லாஹ் பர்ஹான் –

காத்தான்குடியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை இரவு சென்று பார்வையிட்டு, ஆறுதல் கூறினார்.

இதேவேளை, இந்த வன்முறை சம்பவம் தொடர்பில், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் யூ.பீ. திசாநாயக்க உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அமைச்சர் ஹக்கீம் உத்தரவிட்டார்.


முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக செய்திகள், வெளியானதையடுத்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, காத்தான்குடியின் பல பாகங்களிலும் பட்டாசுகள் வெடித்து ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது, ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் – எதிரணி ஆதரவாளர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பலர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்களே, இவ்வாறு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இவர்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை இரவு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூரினார்.

இதனைத் தொடர்ந்து, காத்தான்குடிக்கு விஜயம் செய்த மு.கா. தலைவர் ஹக்கீம், அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற, காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள தேநீர் சாலை மற்றும் தேசிய தெளஹீத் ஜமாஅத் பள்ளிவாயல் ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்.

இதனையடுத்து, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மு.கா.வின் நாடாளுமன்ற வேட்பாளருமான சிப்லி பாரூக்கின் காத்தான்குடி இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும், மு.கா. தலைவர் பங்கேற்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்