காவலாளிகளுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு இல்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பொடுபோக்கு

🕔 April 10, 2018

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் காவலாளிகளாகக் கடமையாற்றுவோருக்கான மேலதிக வேலை நேரக் கொடுப்பனவுகள், மிக நீண்ட காலமாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

காவலாளிகளின் கடமை நேரம் பற்றிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 29/2017 இன் படி, காவலாளி ஒருவருக்கான கடமை நேரம் 09 மணித்தியாலங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே காவலாளிகளுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டுமெனவும், ஞாயிறு மற்றும் அரசாங்க விடுமுறை தினங்களும் காவலாளிகளுக்கு சாதாரண வேலை நாட்களாகக் கருதப்பட வேண்டுமெனவும் குறித்த சுற்றறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளிலுள்ள அதிகமான காவலாளிகள், நாளொன்றுக்கு 12 மணித்தியாலங்கள் பணியாற்றுகின்றனர்.

ஆயினும், மேற்படி காவலாளிகள் தினமும் மேலதிகமாக கடமையாற்றும் 03 மணித்தியாலங்களுக்கும், இதுவரையில் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காவலாளிகளின் கடமை நேரம் பற்றிய சுற்றறிக்கையின் iii ஆம் பிரிவின்படி, 09 மணித்தியாலத்துக்கு மேலதிகமாக மேற்கொள்ளப்படும் சேவைக்காக, மேலதிக நேரக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கான உரித்தினை வழங்க முடியும்.

இது இவ்வாறிருக்க ஏனைய வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் காவலாளிகளாகப் பணியாற்றுகின்றவர்களுக்கு, மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அறிக் கிடைக்கிறது.

எனவே, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் காவலாளிகளுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குவதற்கு, அவ் அலுவலகத்தின் பணிப்பாளர் உடனடியாக, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்