கோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற்றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன?

🕔 April 5, 2018

– அஹமட் –

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஏழரைக் கோடி ரூபாய் படி (மொத்தம் 52 கோடி 50 லட்சம் ரூபாய்) அந்தக் கட்சிக்கு பணம் வழங்கப்பட்டதாக பொருள்படும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஷ ராஜபக்ஷவின் புதல்வர் ராகித ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருந்தமை அரசியலரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது அறிந்ததே.

இந்த நிலையில், ராகித ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவினை சுட்டிக்காட்டி சில இணையத்தளங்கள் செய்திகளையும் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இவ்வாறு பொய்யான வதந்தியினைப் பரப்புகின்றவர்களுக்கு எதிராக, அந்தக் கட்சி சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான ‘தாருஸ்ஸலாம்’ இல், இருந்து இயக்கப்படும் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘பொய் வதந்தி பரப்பும் கைக்கூலி இணையத்தளங்களுக்கு எதிராக, முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை’ எனும் தலைப்பில், மு.கா. சார்பான அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்; ‘பொய்யான வதந்தியை பரப்பி வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது பற்றி, கட்சியின் சட்டத்தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையாகவே, மேற்குறிப்பிட்ட விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ‘சுத்தமாக’ இருக்குமாயின், குறித்த தகவலை வெளியிட்ட ராகித ராஜபக்ஷ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால், முஸ்லிம் காங்கிரசின் வண்டவாளங்களை வெளியில் கொண்டு வருபவர்களை அச்சமூட்டிப் பார்க்கலாம் என நினைத்து, அந்தக் கட்சியின் உயர் தட்டு ஆசாமிகள் இவ்வாறு பூச்சாண்டி காட்டுவது வழமையாகும்.

எவ்வாறாயினும், ராகித ராஜபக்ஷ மீது முஸ்லிம் காங்கிரஸ் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையாயின், முஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றுக் கொண்டதாக அவர் வெளியிட்ட தகவலை உண்மை என்றுதான் பெரும்பாலானோர் நம்புவார்கள்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்