கல்முனையைக் கைப்பற்றியது மு.காங்கிரஸ்; மேயரானார் சட்டத்தரணி றக்கீப்

🕔 April 2, 2018

– மப்றூக், படஙகள்: எஸ்.எல். அஸீஸ் –

ல்முனை மாநகர சபையின் ஆட்சியை  யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

குறித்த சபையின் முதல் அமர்வு – இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பித்தது.

இதன்போது கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம். றக்கீப் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

41 ஆசனங்களைக் கொண்ட கல்முனை மாநகர சபையின் இன்றைய அமர்வில் 31 உறுப்பினர்களே கலந்து கொண்டனர். அவர்களில் இருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி றக்கீப் 22 வாக்குகளை ஆதரவாகப் பெற்றுக் கொண்டார்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட ஹென்றி மகேந்திரன் 07 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இன்னொருபுறமாக, சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுயேட்சைக் குழுவின் 09 உறுப்பினர்களும், இன்றைய சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

ஆயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரசிரசின் 05 உறுப்பினர்களும், சட்டத்தரணி றக்கீபுக்கு ஆதரவாக வாக்களித்தமையும் இங்கு விசேட அம்சமாகும்.

இந்த நிலையில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று தமிழ் உறுப்பினர்களும் சட்டத்தரணி றக்கீபுக்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இஸட்.எச்.ஏ. றகுமானும் சட்டத்தரணி றக்கீபுக்கு சார்பாக வாக்களித்திருந்தார்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 07 ஆசனங்களையும் சாய்ந்தமருதில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 09 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 05 உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டன.

அதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணி 03 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான மக்கள் முன்னணி ஆகியவை தலா ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டன.

மேலும், இரண்டு சுயேட்சைக் குழுக்களும் தலா ஒவ்வொரு ஆசனத்தை கல்முனை மாநகர சபையில் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“>

Comments

புதிது பேஸ்புக் பக்கம்