மஹிந்தவுடன் இணைந்தது முஸ்லிம் காங்கிரஸ்

🕔 March 28, 2018

– அஹமட் –

ஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, நாட்டிலுள்ள சில உள்ளுராட்சி சபைகளில் மு.காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ மீது மு.கா. கூறி வந்த குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் அர்த்தமில்லாமல் போயுள்ளதோடு, தனது ஆதரவாளர்களையும் மு.காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

புத்தளம் நகர சபையில் நேற்று செவ்வாய்கிழமை மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்கியிருந்தது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், இன்று புதன்கிழமை அச்சபையில் ஆட்சியமைப்பதற்கும் மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளித்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக சில நாட்களுக்கு முன்னர் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே, மஹிந்த அணியுடன் மு.காங்கிரஸ் கைகோர்த்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்வது இனியும் கடினமான காரியமாகும் என்றும் மு.கா. தலைவர் கூறியிருந்தமையும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், புத்தளம் நகர சபையில் மு.காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்க மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புத்தளம் நகர சபைக்கான தேர்தலில், மு.காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் தனித்து போட்டியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, உள்ளுராட்சி சபைகளில் மு.காங்கிரஸ் ஆட்சியமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்