அம்பாறை வன்செயல் வழக்கு; முன்னர் பிணை வழங்கப்பட்டவர்களை, அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாக சேர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 March 28, 2018

ம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களையும், மீதி வழக்குகளில் இணைப்பதோடு, அவர்களுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் ( ICCPR Act)  கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

மேலும், அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பில் பொலிஸார் தாக்கல் செய்துள்ள அனைத்து வழக்குகளுடனும் தொடர்புபட்ட 08 சந்தேக நபர்களையும் விளக்க மறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த வழக்குகளில் குரல்கள் இயக்கம் சார்பில் நேற்று ஆஜரான  சட்டத்தரணிகள்  றதீப் அகமட், முஹைமின் காலித் மற்றும் ஹஸ்ஸான் றுஷ்தி ஆகியோர், நேற்று என்ன நடந்தது என,பின்வருமாறு தகவல் வெளியிட்டுள்ளனர்.

“மொத்தமாக 06 வழக்குகள் அம்பாறை நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தன. காலை 11.00 மணியளவில் முஸ்லிம் ஹோட்டலுக்கெதிரான வழக்கு நீதிமன்றில் அழைக்கப்பட்டது. இதன்போது அரச ரசாயன அறிக்கையின் பிரகாரம், கர்ப்பத்தடை மாத்திரை விவகாரம் பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவ்வழக்கு உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், முஸ்லிம்கள் இருவரும் முற்றாக விடுவிக்கப்பட்டனர்.

மேலும் கடந்த தவணைகளின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும், அனைத்து வழக்குகளிலும் சந்தேக நபர்களாகச் சேர்த்து, அவர்களை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR Act) கீழ் இணைக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகளை இம்முறை பொலிஸார் கவனத்திலெடுத்திருந்தனர். அதற்கமைவாக ஏற்கனவே பிணையில் விடப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களையும் – அனைத்து வழக்குகளிலும் இணைக்கவும் மீண்டும் விளக்க மறியலுக்கு அனுப்பவும் மன்றின் அனுமதியை கோரினர்.

இதன்போது நீதிமன்றில் அப்போதிருந்த அனைத்து சட்டத்தரணிகளும் மேற்சொன்ன சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராதோடு, மேற்படி கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பினையும் தொடர்ந்து வெளியிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் என்று எவரும் நீதிமன்றிற்கு நேரடியாக வராமலிருக்கையில் என்ன அடிப்படையில் யாருக்காக நீங்கள் ஆஜராகின்றீர்கள் என, எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளும், நீதவானும் தொடர்ச்சியாக எம்மிடம் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில், மேற்சொன்ன சந்தேக நபர்கள் இருவரும் அனைத்து வழக்குகளிலும் சேர்க்கப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்ததோடு, எமது பிரதிநிதித்துவ உரிமைக்கான விடயங்களையும் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளின் கீழ் பலமாக வாதிட்டிருந்தோம்.

இவ்வாறாக மாலை 4.00 மணியளவில் ஆரம்பித்த இந்த வழக்குகள் நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு மாலை 5.20 மணியளவில் நிறைவுற்றது.

இறுதியில் மேற்சொன்ன இருவரையும் மீதி வழக்குகளில் ICCPR  சட்த்தின் கீழ் இணைக்கவும் மொத்தமாக 8 பேரையும் விளக்க மறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்