முச்சந்தி

🕔 March 27, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

ண்டைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் சில திரைப்படங்கள் போல், உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையிலான உறவு மாறியிருக்கிறது.

உள்ளுராட்சி சபைகள் இன்னும் இயங்கத் தொடங்கியிராத நிலையிலேயே, ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது மிகவும் கடினமாகும்’ என்று, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டதாகவும் மு.கா. தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பாலும் அரசியலில் உணர்சிவசப்பட்டு அறிக்கைகள் விடாத முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், திடீரென இப்படிக் கூறியிருக்கின்றமை கவனத்துக்குரியதாகவும்.

தேர்தல் திருமணம்

உள்ளுராட்சி சபைகளுக்கான கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து பெரும்பாலான இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில் மு.காங்கிரசுக்குள் பலத்த எதிர்ப்பு இருந்தது.

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என, அந்தக் கட்சியின் உள்ளுர் மட்டத்திலிருந்து உயர்பீடம் வரையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் மு.காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் முடிவினை ரஊப் ஹக்கீம் எடுத்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு மு.காங்கிரஸ் ஏன் தீர்மானித்தது என்பதற்கு, தேர்தல் பிரசார மேடைகளில் மு.காங்கிரசின் தலைவர் ஒரு காரணத்தைக் கூறியிருந்தார்.

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டுமென்று அந்தக் கட்சியின் தலைவர் என்னிடம் கோரிக்கையொன்றினை விடுத்தார். அப்படி இணைந்து போட்டியிடுவதால் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போது, முற்று முழுதாக முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்ற சபைகளைக் கூட, ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிக் கொண்டதாகவே கூறப்படும். நாட்டில் அதிகமான சபைகளை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றிக் கொண்டதாக காட்டிக்கொள்ள வேண்டிய தேவை, அந்தக் கட்சிக்கு இருக்கிறது. அந்த சந்தோசத்தை நாம் ஏன் கெடுக்க வேண்டும். மட்டுமன்றி, நமது பிரதமர் அப்படியொரு கோரிக்கையை என்னிடம் விடுத்ததால், அதனைத் தட்டிக்கழிப்பதும் சரியாகப் படவில்லை. எனவேதான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்குத் தீர்மானித்தோம்” என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் கூறியிருந்தார்.

யானைப் பாகன்

முஸ்லிம் காங்கிரசின் பிரதான தளம் எனக் கூறப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் தயாகமகேயின் செயற்பாடுகள் தொடர்பில் அந்த மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பாரிய அதிருப்திகள் உள்ளன.

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலையில், புத்தர் சிலை அடாத்தாக வைக்கப்பட்டதன் பின்னணியில் தயாகமகே இருந்தார் என்கிற குற்றச்சாட்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடம் உள்ளது. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டால், அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் தயாகமகேயின் கைகள் மேலும் ஓங்கி விடும் என்கிற அச்சமும் அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு இருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு மற்றும் அச்சம் ஆகியவை குறித்து மு.காங்கிரஸ் தலைவரும் அறிவார். எனவே, அவை தொடர்பாக தேர்தல் மேடைகளில் சில விடயங்களை மு.கா. தலைவர் தெரிவித்திருந்தார். “ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும், யானையின் பாகனாகத்தான் நாங்கள் இருப்போம்” என்று, புத்தளத்தில் வைத்து மு.கா. தலைவர் கூறியிருந்தார். “மதம் பிடித்த யானைக் கூட்டங்களை அடித்து விரட்டுவதற்காகவே, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மு.காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகிறது” என, இறக்காமத்தில் நடந்த கூட்டமொன்றில் ஹக்கீம் தெரிவித்திருந்தார். “உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவதன் மூலமாக, யானைகளை மரத்தில் கட்டிப் போட முடியும்” எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

மோசடி

இவ்வாறான நிலையில்தான், “ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது” என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற நிகழ்வுகளில் உரையாற்றும் போது விசனம் தெரிவித்திருக்கின்றார். எனவே, “இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதென்பது கடினம்” எனவும் ஹக்கீம் கூறியிருக்கின்றார்.

மேலும், “ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு நாங்கள் எடுத்த முடிவு, தற்போது முச்சந்தியில் நிற்கிறது” எனவும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.

ஆக, அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு ஏனோதானோ என கருத்துக்களை அள்ளி வீசாதவர் என அறியப்பட்டுள்ள மு.கா. தலைவர், இப்படி பாரதூரமாகப் பேசியுள்ளமையினை வைத்தே, பிரச்சினையின் தீவிரத்தினைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதேவேளை, உள்ளுராட்சி சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஹக்கீம் தனது உரையில் கூறியுள்ளார். மேலும், மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜனபெரமுன கட்சியினரும் மு.காங்கிரசை நாடி வந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மு.கா. தலைவர் தெரிவித்துள்ளார்.

முச்சந்தி: அர்த்தம் என்ன?

இந்த இடத்தில், ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு, தற்போது முச்சந்தியில் நிற்கிறது’ என, ஹக்கீம் கூறியுள்ளமையினை மீண்டும் ஒரு தடவை கூர்ந்து கவனிக்கும் போது, அதற்குரிய அர்த்தத்தினை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள இயலுமாக இருக்கும்.

முச்சந்தியொன்றில் நின்று கொண்டிருக்கும் நபரொவருவர் மூன்று பாதைகளில் பயணிக்க முடியும். ஒன்றுளூ அவருக்கு எதிரே உள்ள பாதையில் பயணிக்கலாம். தேவையாயின் இடது பக்கமாகவும் பயணிக்க முடியும். அல்லது வலது புறமாகச் செல்லும் பாதையிலும் பயணிக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியுடன் மு.காங்கிரஸ் இணைந்து பயணிப்பதென மு.கா. எடுத்த முடிவானது, எதிரே உள்ள பாதையில் பயணிப்பதற்கு ஒப்பானதாகும்.

ஆனால், இப்போது அந்த முடிவு முச்சந்தியில் நிற்கிறது என்றால், எதிரே உள்ள பாதையைத் தவிர்த்து, இடது புறமாகவோ, அல்லது வலது பக்கமாகவோ செல்லும் பாதைகளிலும் பயணிப்பதற்கான சாத்தியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இடது மற்றும் வலது புறமாக அமைந்திருக்கும் பாதைகள் சுதந்திரக் கட்சியுடனும், பொதுஜனபெரமுனவுடனும் இணைவதற்கான வழிகளாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மு.காங்கிரஸ் இணைந்து பயணிக்கும் முடிவானது முச்சந்தியில் நிற்பதாக மு.கா. தலைவர் கூறியுள்ளமையினை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தலாகம் பார்க்க முடியும்.

“அம்பாறை மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளர் எங்களுக்கு வேண்டுமென்று அநியாயம் செய்திருக்கிறார். கட்சியின் பொதுநலன் கருதி நாங்கள் அதை மிகவும் பொறுமையுடன் கையாண்டு வந்திருக்கிறோம். சிலர் தறுதலைத்தனமாக நடந்துகொண்டாலும், ஐ.தே.க. தலைமை இதில் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதில் நாங்கள் கறாராக இருந்து கொண்டிருக்கிறோம்” எனவும் மு.கா. தலைவர் தனது உரையில் தெரிவித்திருக்கின்றார்.

அம்பாறை மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளர் என்று, தயாகமகேயைத்தான் மு.கா. தலைவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தபோதும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள கசப்புகளுக்கு, அந்தக் கட்சியின் தலைவர்தான் காரணம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ‘ஐ.தே.க. தலைமை இதில் நேர்மையாக நடக்க வேண்டும்’ என, மு.கா. தலைவர் கூறியுள்ளதிலிருந்தே, ஐ.தே.கட்சியின் தலைமை நேர்மையாக நடக்கவில்லை’ என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

அந்த நேர்மையின்மையினைத்தான் ‘மு.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது’ என, ஹக்கீம் கூறியிருக்கின்றார்.

பதிவற்ற திருமணம்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மு.காங்கிரஸ் இணைந்து உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுட்டதன் மூலம், யாரின் தூண்டிலை யார் விழுங்கியிருக்கின்றார் என்பதை முதலில் இங்கு விளங்கிக் கொள்தல் வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யானைச்சின்னத்தில் போட்டியிட்ட போதும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில், அது தொடர்பாக எந்தவித ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை எனத் தெரியவருகிறது.

அதாவது, எழுத்து மூலமான எந்தவித ஒப்பந்தங்களும் இல்லாமலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிட்டிருக்கிறது.

அப்படிப் பார்த்தால், ஐக்கிய தேசியக் கட்சியின் தூண்டிலைத்தான் மு.காங்கிரஸ் விழுங்கியிருக்கிறது. இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி தனது தூண்டிலை தூக்கியடித்தால், அதை விழுங்கியுள்ள மு.காங்கிரசின் தொண்டைதான் கிழியும் அபாயம் உள்ளது.

பலிக்கும் கூற்று

ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக மு.கா. தலைவர் கூறியுள்ளமையினை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்பில், மு.காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் தெரிவித்திருந்த கூற்று, அரசியலரங்கில் மீண்டும் மேலெழத் தொடங்கியுள்ளது.

‘ஐக்கிய தேசியக் கட்சி எனும் பஸ் வண்டியின் சாரதியாக ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரையில், அந்த வண்டியில் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் பயணிக்காது’ என்று, மு.காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப் ஒரு தடவை கூறியிருந்தார்.

அஷ்ரப்பின் இந்தக் கூற்றினை முன்னிறுத்தியே தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா இன்றுவரை ரணில் விரோத அரசியலை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த உள்ளுராட்சித் தேர்தல் பிரசார மேடைகளிலும், ரணில் தொடர்பான அஷ்ரப்பின் அந்தக் கூற்றினை, அதாஉல்லா தூக்கிப் பிடித்திருந்தார். அதன் அடிப்படையில், ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் நம்பக் கூடாது என்று, அதாஉல்லா வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், ரணில் விக்ரமசிங்க தொடர்பாக அதாஉல்லா தெரிவித்து வரும் கருத்து பலித்துள்ளதாக, மு.காங்கிரஸுக்கு எதிரானவர்கள் கூறத்தொடங்கியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவிடம் ரஊப் ஹக்கீம் பலிகொடுத்து விட்டதாகவும் குற்றச்சாட்கள் மேலெழத் தொடங்கியுள்ளன. இதற்கு மு.கா. தலைவர் என்ன பதில் சொல்லப் போகின்றார் என்று தெரியவில்லை.

பிழைத்துப்போன தாரக மந்திரம்

கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மு.காங்கிரஸ் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போது, மக்களிடம் மு.கா. தலைவர் ஹக்கீம் கூறிய ‘தாரக மந்திரமொன்றினை’ இங்கு நினைவுபடுத்துதல் அவசியமாகும். ‘வெல்வது யானை ஆயினும், ஆள்வது மரம்தான்’ என்று மு.காங்கிரஸ் தலைவர், ஒவ்வொரு மேடையிலும் கூறிவந்தார்.

ஆனால், இப்போது ‘ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது. நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு, மாற்று அணிகளுடன் ஐ.தே.க. ஆட்சியமைக்க முயற்சிக்கிறது’ என்று, மு.காங்கிரஸ் தலைவர் கூறுகின்மையைக் காணும்போது, பரிதாபமாக உள்ளது.

‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டாலும், யானையின் பாகனாகத்தான் நாங்கள் இருப்போம்’ என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பிரசார மேடைகளில் கூறியமைக்கான அர்த்தத்தினை இப்போது, என்னவென்று விளங்கிக் கொள்வதெனப் புரியவில்லை.

உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் நாம் எழுதியிருந்த ஒரு கட்டுரையொன்றில், மு.காங்கிரஸ் தலைவரை ‘அங்குசமில்லா யானைப் பாகன்’ என விமர்சித்திருந்தமையினை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமாகும்.

‘அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்’ என்கிற தலைப்பில் டிசம்பர் 19ஆம் திகதி எழுதப்பட்ட அந்தக் கட்டுரையின் ஒரிடத்தில்; ‘அம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, அதன் யானைச் சின்னத்தில் மு.கா போட்டியிடுவது குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களிடையே அதிருப்தி உள்ளமை குறித்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமும் மிக நன்கு அறிவார்.

ஆகவேதான், ‘ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், யானையின் பாகனாகத்தான் நாங்கள் இருப்போம்’ என்று மு.கா தலைவர், புத்தளத்தில் வைத்துக் கூற நேர்ந்துள்ளது.

அதாவது, ‘ஐ.தே.கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், அந்தக் கட்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமை எங்களிடம்தான் உள்ளது’ என்று, மு.கா தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், மு.கா தலைவர் சொல்வதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை, மு.கா தலைவரே மிக நன்றாக அறிவார். இன்னொருபுறம், பாகனை அடித்துக் கொன்ற யானைகளின் கதைகள் இருப்பதையும் நாம் மறத்தலாகாது.

ஐ.தே.க எனும் யானையின் நிஜ பாகனான ரணில் விக்ரமசிங்கவின் கையில் அங்குசம் இருக்கும் போதே, இடைக்கிடையே யானை விரண்டமை குறித்தும் ஊரே அறியும்.

இந்த நிலையில், வெறுங்கையுடன் யானையை அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, பாகன் வேலை பார்க்கப் புறப்பட்டிருக்கும் நிலை பரிதாபத்துக்குரியதாகும்’ என எழுதியிருந்தோம்.

நமது எழுத்து பலித்திருக்கின்றமையை புரிந்துகொள்ள முடிகிறது. அங்குசமில்லா பாகனை – யானை அடித்திருக்கிறது. அதனை பாகனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பாகனின் நேர்மை பாராட்டத்தக்கது.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (27 மார்ச் 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்