அமித் வீரசிங்கவை சிறை சென்று சந்தித்தார் ஞானசார; கள்ளத் தொடர்பு அம்பலமானது

🕔 March 24, 2018

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ‘மஹசொன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், இன்று சனிக்கிழமை சென்று சந்தித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமித் வீரசிங்க, தற்போது நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே, அமித் வீரசிங்கவை பார்வையிடுவதற்காக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை சென்றுள்ளார்.

கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சமயத்தில், அந்தத் தாக்குதல் திட்டங்கள் குறித்து, ஞானசார தேரருடன் அமித் வீரசிங்க பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், தற்போது அமித் வீரசிங்கவை ஞானசார தேரர் சிறைக்குச் சென்று சந்தித்துள்ளமையின் மூலம், அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு மேலும் நிரூபணமாகியுள்ளது.

Comments