இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

🕔 March 20, 2018

– ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் –

லங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இன வன்முறைக்கு எதிராகவும், அந்த வன்முறையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா நகரில் நடைபெற்றது.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை, சுவிஸர்லாந்தில் இருந்து இயங்கும், ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் (EIMF) விடுத்திருந்தது.

பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில்; ‘இனவாதத்தை நிறுத்து’, ‘பள்ளிவாசல்களை உடைக்காதே’, ‘முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடாதே’, ‘சட்டத்தை சரிசமமாக அமுல்படுத்து’, ‘குற்றவாளிகளை கைதுசெய்’ என்பன உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களையும், பதாதைகளையும் தாங்கியபடி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் முன்பாக கூடிய இந்த மக்கள், இனவாதத்துக்கு எதிராகவும் உரத்த குரலில் கோஷமிட்டனர்.

சுவிஸ், பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து வருகைதந்த இலங்கைவாழ் முஸ்லிம்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்றனர். இதன் இறுதியில் 03 முக்கிய மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சாயிட் ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் சிறுபான்மை விவகார சிறப்பு அறிக்கையாளர் டொக்டர் பெர்னான்ட் டீ. வரன்னஸ் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் ஜெனீவா பிரதிநிதி திருமதி ஜெஸீமா பக்லி ஆகியோரிடம் இந்த மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

இந்த மகஜரில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான இனவாத அடக்குமுறைகளை நிறுத்த, சர்வதேச சமூகம் உரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்