மாகாணசபை தொகுதி நிர்ணயமும், முஸ்லிம்களும்

🕔 March 18, 2018

– வை எல் எஸ் ஹமீட் –

மாகாண தொகுதி நிர்ணய அறிக்கை நாடாளுமன்றுக்கு வருகிறது. 222 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு 13 தொகுதிகளே இருப்பதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களின் விகிதாசாரப்படி ஆகக்குறைந்தது 21 தொகுதிகள் இருக்கவேண்டும். போனஸ் தவிர்ந்த மொத்த ஆசனங்கள் 437 ஆகும். அவற்றில் முஸ்லிம்களுக்கு 42 ஆசனங்களாவது கிடைக்க வேண்டும்.

கிழக்கில் பெறக்கூடிய அதிகூடிய ஆசனம் 13 ஆகும். அபூர்வமாக 14 பெறலாம். வடக்கில் இரண்டு ஆசனங்கள்தான் கிடைக்கும் . முல்லைத்தீவில் இம்முறை ஆசனம் கிடைப்பது சந்தேகமாகும். வடக்கு மற்றும் கிழக்கில் அதிகூடிய தொகுதிகள் 07 ஆகவே இருக்கும். எனவே, வடக்கு மற்றும் கிழக்கு வெளியே 06 தொகுதிகளே மிஞ்சும்.

அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கில் 15 ஆசனங்கள் பெற்றால் ஏனைய 27 ஆசனங்கள் வடக்கு கிழக்குக்கு வெளியே பெறப்பட வேண்டும். ஆனால் 06 தொகுதிகளைத் தவிர, வேறு தொகுதிகளில் ஆசனம் பெறமுடியாது. புண்ணியத்தில் தேசியக்கட்சிகள் ஒன்றிரண்டு பட்டியலில் நியமிக்கலாம். உதாரணமாக, சுமார் ஒரு லட்சம் முஸ்லிம் வாக்குகளைக்கொண்ட குருநாகல் மாவட்டத்தில் ஒரு ஆசனம்கூட பெறுவது கடினமாகும்.

எனவே, பாதி ஆசனங்களையாவது இழக்கப்போகின்றோம். இந்தப் பின்னணியில்தான் தொகுதி நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்திற்கு வருகின்றது.

மூன்றில் இரண்டு தேவை

தொகுதி நிர்ணய அறிக்கையை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. முஸ்லிம் கட்சிகள் இதற்கெதிராக வாக்களிக்க வேண்டும் என்ற கோசம் பரவலாக எழ ஆரம்பித்திருக்கின்றது. கட்டாயம் எதிர்த்து வாக்களித்தே ஆகவேண்டும். அதேநேரம் அரசாங்கமும் இவ்வறிக்கையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் தோற்கடிக்கப்படுவதை விரும்பலாம்.

அதன்மூலம் தேர்தலை சற்றுத் தாமதிக்கலாம். எனவே, நமது கட்சிகள் தைரியமாக எதிர்த்து வாக்களிக்கலாம். அரசாங்கம் கோபித்துக் கொள்ளாது. அதன்பின் நடக்கப்போவது என்ன?

சட்டம் என்ன கூறுகிறது?

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறத்தவறினால், பிரதமர் தலைமையில் பிரதான சமூகங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஐவர் கொண்ட மீளாய்வுக் குழுவை சபாநாயகர் நியமிக்க வேண்டும்.

மாகாண சபைகள் அமைச்சர் அக்குழுவுக்கு அறிக்கையை அனுப்பிய இரண்டு மாதத்திற்குள், அந்தக் குழு தனது மீளாய்வை நிறைவுசெய்து ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். அறிக்கை கிடைத்ததும் உடனடியாக ஜனாதிபதி அதனைப் பிரகடனம் செய்ய வேண்டும்.

இங்கு எழுகின்ற கேள்விகள்

புவியியல் துறை பேராசிரியர் ஹஸ்புல்லா போன்றவர்களை உள்ளடக்கிய அந்தக்குழுவுக்கே,முஸ்லிம்களுக்கு வழங்கும் வகையில்  13 தொகுதிகளுக்கு மேல் செல்ல முடியவில்லை.  இந்த நிலையில் மீளாய்வுக்குழு மேலும் எட்டுத் தொகுதிகள் உருவாக்கி விடுவார்களா? ஒன்றிரண்டு மாற்றங்கள் சிலவேளை சாத்தியப்படலாம்.

மேலும் எட்டு தொகுதிகள் உருவாக்கப்பட்டு எமது விகிதாசாரத்துக்கேற்ப குறைந்தது 21 தொகுதிகளைப் பெறுகிறோம் என்று ஓர் அதீத கற்பனை செய்வோம். அப்படியென்றாலும், மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டும்தானா முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள்? ஏனைய தொகுதிகளில் வாழ்கின்ற மக்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு உறுதி செய்வது?

எல்லோரும் தொகுதி நிர்ணயத்தைப் பற்றி மட்டும்தான் பேசுகின்றார்கள். தொகுதி நிர்ணயத்தில் முஸ்லிம்களின் பங்கை உறுதிப்படுத்தினால்கூட, அது பாதியாகத்தான் ( 50%) இருக்கும். அப்படியென்றால், வடக்கு மற்றும் கிழக்கில் பட்டியலில் கிடைக்கும் ஒரு சில ஆசனங்களைத் தவிர, மிகுதி ஆசனங்களின் நிலை என்ன?

தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதால் மாத்திரம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாது. அதேநேரம் நாடாளுமன்றத்தில் இவ்வறிக்கைக்கு எதிராக வாக்களிப்பதன் மூலம், இதனை அமுலுக்கு வருவதைத் தடுக்கவும் முடியாது. அவ்வாறாயின் தீர்வுதான் என்ன?

தீர்வு

ஒன்றில் பழையமுறையை தொடர்ந்து பின்பற்றுவது அல்லது இரட்டை வாக்கைக் கோருவது தீர்வாக இருக்கும்.

உண்மையில் சட்டமூலத்துக்கு வாக்களிக்க முன்பாக இந்த இரட்டை வாக்கைக் கோரியிருக்கலாம். அதை இப்பொழுது பேசுவதால் பிரயோசனமில்லை.

ஆயினும், இரட்டை வாக்கை இப்பொழுதாவது முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் கேட்க வேண்டும். இல்லையெனில் பழைய முறையைக் கேட்க வேண்டும். முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் முட்டுப்பலத்தை இதற்காவது பயன்படுத்துவார்களா?

பழைய தேர்தல் முறைக்கு பல கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது. எனவே, அதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகள் முயற்சியுங்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்