பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல்

🕔 March 15, 2018

பேஸ்புக் மீதான தடையினை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு, அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைகளை ஊக்குவிக்கும் படியான பதிவுகளை பேஸ்புக்கில் இடுவதைக் கட்டுப்படுத்துவதாக, அந்த நிறுவன அதிகாரிகள் வழங்கிய உறுதியினை அடுத்து, பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோருக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, மேற்படி உத்தரவாதம் வழங்கப்பட்டது.

‘எனது அறிவுறுத்தல்களின் படி, பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுடன் எனது செயலாளர் பேச்சு நடத்தினார். அதன்போது, வெறுப்புப் பேச்சுகளுக்கும் வன்முறைகளத் தூண்டுவதற்கும் பேஸ்புக்கில் இடமளிக்கப்பட மாட்டாது என, அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

எனவே, பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்கும் படி, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு நான் அறுவுறுத்தியுள்ளேன்’ என, தனது ட்விட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்